வாஷிங்டன், அமெரிக்கா: உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக குழந்தைகள் பிறப்ப விகிதம் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குழந்தை பிறப்பு விகிதம் 3.596 மில்லியன் என்ற அளவில் இருக்கிறது. இது கடந்த 40 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 2 சதவீதம் சரிவு என அமெரிக்க தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.
உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் பொருளாதார சூழல் ஆகியவை காரணமாக பெரும்பாலான தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 2023 ஆம் ஆண்டில் 3.6 மில்லியன் என சரிந்திருக்கிறதாம். அதாவது 5 சதவீதம் இது சரிந்து இருப்பதாகவும் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்றும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 9.5 மில்லியன் என குறைந்துள்ளது. 1949 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இரண்டாவது முறையாக சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு பெரிய வீழ்ச்சியை கண்டிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
குறிப்பாக அமெரிக்காவில் சுகாதார செலவுகள் மற்றும் மருத்துவ கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் பல்வேறு தம்பதிகளும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுவதாக ஓஹியோ பல்கலைக்கழகத்தின் இயக்குனர் சாராஃபோர்டு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசியல் சூழல், பொருளாதார சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய காரணமாக பெரும்பாலான தம்பதிகள் குழந்தையை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுவதாகவும் சிலர் வேண்டாம் என்ற முடிவை எடுப்பதாகவும் அவர் கூறுகிறார். எதிர்காலம் குறித்து கவலையில் இருக்கக்கூடிய பல்வேறு நபர்களும் இப்படி ஒரு சூழலில் குழந்தைகளை கொண்டு வந்து ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என எண்ணுவதாக அவர் தெரிவிக்கிறார்.
மேலும் அமெரிக்காவில் 15 லிருந்து 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை பெருமளவில் தள்ளிப் போடுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. பலரும் தங்களுடைய கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை தந்து குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார்கள் என சொல்கின்றனர். அமெரிக்காவில் முதன்முறையாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களின் சராசரி வயது 27 ஆக மாறி இருக்கிறது என சாராஃபோர்டு கூறுகிறார்.
அமெரிக்காவில் பதின்ம வயதினர் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் 2022 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டில் 4 சதவீதமும் 2007ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 68 சதவீதமும் என குறைந்துள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு பெண்களுக்கான குழந்தை பிறப்பு விகிதம் 1.6 என்ற அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications