சிலிக்கான் வேலி வங்கியின் சரிவுக்குப் பிறகு அமெரிக்க சந்தை மட்டும் அல்லாமல் ஐரோப்பா, சீனா, ஜப்பான் என உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் நிதியியல் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளது.
இந்த நிலையில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி-யை கைப்பற்ற வேலி நேஷ்னல் பேன்கார்ப் மற்றும் ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க்ஷேர்ஸ் இன்க். (First Citizens BancShares Inc) ஆகிய இரு வங்கிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
இது மட்டும் அல்லாமல் Valley National Bancorp மற்றும் First Citizens Bank ஆகிய இவ்விரு வங்கிகளும் தனிப்பட்ட முறையில் பிட்டிங் தொகையை FDIC அமைப்பிடம் கொடுத்துள்ளது.
பேச்சுவார்த்தை ஆரம்பம்!
சிலிக்கான் வேலி வங்கியை ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப் (FDIC) இலிருந்து வாங்குவதற்கு ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க்ஷேர்ஸ் இன்க் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் ஒப்பந்தம் கைகூடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிலிக்கான் வேலி வங்கியை கைப்பற்றுவதற்கான பிட்டிங்-ஐ சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் Valley National Bancorp மற்றும் First Citizens BancShares ஆகிய வங்கிகள் பிட்டிங்-ஐ சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இன்னும் இந்த விண்ணப்பம் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க்ஷேர்ஸ் இன்க்
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் இதுவும் ஒன்று. ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் நிறுவனம் வட கரோலினாவின் (North Carolina) ராலேயில் (Raleigh) உள்ள ஒரு வங்கி ஹோல்டிங் நிறுவனமாகும்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, வட கரோலினாவை தளமாகக் கொண்ட ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க்ஷேர்ஸ் இன்க் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8.4 பில்லியன் டாலராக உள்ளது.
நியூ ஜெர்சியை தளமாகக் கொண்ட வேலி நேஷனல் வங்கி நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 4.7 பில்லியன் டாலராகும்.
FDIC மறுப்பு!
சிலிக்கான் வேலி வங்கியை கைப்பற்றுவதற்கான பிட்டிங் குறித்து FDIC அமைப்பின் பிரதிநிதியிடம் கருத்து கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் நிறுவனமும் எந்த கருத்தையும் கூறவில்லை.
இதனால் எவ்விதமான முடிவும் எட்டப்படவில்லை.
சிலிக்கான் வங்கியின் வரலாறு
சிலிக்கான் வேலி வங்கி 1983ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ துறைகளில் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதையே பிரதான தொழிலாக சிலிகான் வேலி வங்கி செய்துவந்தது.
அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியாகவும் சிலிகான் வேலி வங்கி இருந்து வந்தது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி சிலிகான் வேலி வங்கியிடம் 209 பில்லியன் டாலர் சொத்துகள் இருந்துள்ளன.
சிலிக்கான் வங்கி திவால்!
அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி வந்த சிலிக்கான் வேலி வங்கி கடந்த வாரம் திவாலாகிவிட்டது. 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாக சிலிக்கான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
வட்டி விகித உயர்வு
வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் சொத்துகளுக்கும், கடன்களுக்கும் இடையே நெருக்கடி ஏற்பட்டு சிலிக்கான் வேலி வங்கி கவிழ்ந்துவிட்டது. இந்நிலையில், சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி பின்னர் அமெரிக்க அரசால் மூடப்பட்டது. வெறும் 48 மணி நேரத்தில் சிலிக்கான் வேலி வங்கி ஒன்றுமில்லாமல் போய்விட்டது. 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடிக்கு பின் சிலிக்கான் வேலி வங்கி கவிழ்ந்தது மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications