அமெரிக்கா: எங்கு பார்த்தாலும் தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சு தான் காணப்படுகிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பம் பெரும்பாலான துறைகளில் நுழைந்துவிட்டது.
இப்படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் தேவை அதிகரிப்பதால் உலகிலேயே ஒரு நிறுவனம் தான் அதிக லாபம் பெற்று வருகிறது. அதுதான் அமெரிக்காவை சேர்ந்த என்விடியா.

என்விடியா நிறுவனம் கூடிய விரைவில் உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட நிறுவனமாக மாற இருக்கிறது. என்விடியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அக்டோபர் 14ஆம் தேதி மட்டும் 2.4 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை 138 டாலர்களாக இருக்கிறது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3.39 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பினை எட்டி உள்ளது.
தற்போது அமெரிக்காவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3.52 டிரில்லியன் டாலர்கள் ஆகும். எனவே கூடிய விரைவில் என்விடியா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை மிஞ்சிவிடும் என சொல்லப்படுகிறது.
என்விடியா நிறுவனம் உலக அளவில் செயற்கை நுண்ணறிவு பிராசஸர்களை தயாரித்து வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. தற்போது பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் கவனம் செலுத்துவதால் என்விடியா நிறுவனத்தின் ஏஐ பிராசஸர்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
எனவே என்விடியா மீதான நம்பிக்கை அதிகரித்து பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளை அதில் குவித்து வருகின்றனர். தற்போது சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமாக என்விடியா செயல்பட்டு வருகிறது. என்விடியா நிறுவனம் கூடிய விரைவில் தங்களுடைய அதிநவீன செயற்கை நுண்ணறிவுச் பிளாக் வெல் சிப்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இது அறிமுகம் செய்யப்பட்டால் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. கடந்த பத்து மாத காலத்தில் மட்டுமே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 190 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்பங்களின் தேவை அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் ஆகும். என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்வதால் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சென் ஹூவாங்கின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
என்விடியா நிறுவனம் சிப்கள் வடிவமைப்பு, தரம் சரிபார்ப்பு, மார்க்கெட்டிங் ஆகிய பணிகளை மட்டுமே பிரதானமாக செய்கிறது. சிப்களை தயாரிப்பது , சோதிப்பது, ஒருங்கிணைப்பது உள்ளிட்டவற்றை தைவான் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து அவற்றிடம் இருந்து கொள்முதல் செய்கிறது.


Click it and Unblock the Notifications