வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வரும் 20ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க பாரம்பரிய முறைப்படி என்னென்ன நிகழ்வுகள் நடைபெறும் என்பதை தற்போது பார்க்கலாம்.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் அரியணையில் அமர இருக்கிறார். இதனை அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் , தற்போது பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடன் கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால் கடந்த தேர்தல் தோல்வியை சந்தித்த டிரம்ப் , பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார்.

ஆனால் பைடன் சுமூகமான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
பதவி பிரமாணம் ஏற்றுக் கொள்வது ,இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்ட அணி வகுப்புகள் அதனைத் தொடர்ந்து சில அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவை நடைபெற இருக்கின்றன. முதலில் டிரம்பும் அவரை தொடர்ந்து துணை அதிபராக ஜேடி வான்ஸ்ம் பதவி ஏற்பார். இதனை அடுத்து இவ்விருவரின் பதவிக்காலமும் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சரியாக 12 மணி அளவில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியானது நடைபெறும். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்காக சுமார் 2 , 20,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதலாக 2,50,000 பேர் நேஷனல் மால் பகுதியில் இந்த நிகழ்வை காண்பதற்கு கூடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பதவியேற்பு நிகழ்வின் ஒரு பகுதியாக கேரி அண்டர்வுட்டின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இசை நிகழ்ச்சி தொடங்கி அது முடிவடைந்த பிறகு வெள்ளை மாளிகையின் பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த வாகன அணி வகுப்பில் ராணுவ படையினர் பங்கேற்பார்கள். வெள்ளை மாளிகைக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு சிறப்பு அரங்கத்தில் இருந்து டிரம்ப் மற்றும் அவருடைய விருந்தினர்கள் இந்த அணிவகுப்பை பார்வையிடுவார்கள்.
இதனை அடுத்து டொனால்ட் டிரம்ப அதிபர் அலுவலகத்திற்கு செல்வார். அங்கே அவர் முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிடுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என சொல்லப்படுகிறது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அன்று மாலை வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாட இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், அமைச்சர்களும், தூதர்களும் கலந்து கொள்கின்றனர். எலான் மஸ்க், மார்க் ஜக்கர்பெர்க், சுந்தர் பிச்சை உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவன தலைவர்களும் பஙகேற்க உள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications