அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஜெய் பட்டாச்சாரியா என்பவரை தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்துள்ளார்.
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் எனப்படும் தேசிய சுகாதார நிறுவனம் அமெரிக்காவின் சுகாதாரத்துறைக்கு அங்கமான ஒரு முகமை ஆகும். அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆய்வு முகமையாக இது செயல்படுகிறது. இதன் தலைவராக இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்த ஜெய் பட்டாச்சார்யாவை டொனால்ட் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

1968 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர் தான் ஜெய் பட்டாச்சார்யா. அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்டி மற்றும் பொருளாதாரப் பிரிவில் பிஎச்டி பட்டம் பெற்றவர். இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கொள்கைக்கான பேராசிரியராகவும், தேசிய பொருளாதார ஆய்வு துறையில் முக்கிய ஆய்வாளராகவும் செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி இவர் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை நடத்தி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
ஜெய் பட்டாச்சாரியாவின் ஆய்வுகள் பெரும்பாலும் பொருளாதாரம், உயிரியல் மருத்துவம் மற்றும் அரசாங்க கொள்கைகளுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் வகையிலும், எளிதில் பாதிக்கப்படும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர் தொற்றுநோய் ஆய்வு மற்றும் அதற்கு அரசு எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது தொடர்பாக ஆய்வுகளை நடத்தினார். மேலும் பொது சுகாதார நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்கா அரசு நடைமுறைப்படுத்திய பொதுமுடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இவர் விமர்சனம் செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜெய் பட்டாச்சாரியா "கொரோனா வைரஸ் உண்மையிலேயே ஆட்கொல்லி வைரஸ் தானா?" என்ற தலைப்பில் முக்கியமான ஒரு ஆய்வினை நடத்தி கட்டுரையை வெளியிட்டார்.
அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜனவரி 20ஆம் தேதி அவர் அதிபராக முறைப்படி பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில் அவர் பல்வேறு துறைகளுக்கான அதிகாரிகளை நியமனம் செய்து வருகிறார்.
குறிப்பாக இந்திய அமெரிக்கர்களையும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களையும் அவர் முக்கிய பணிகளில் நியமனம் செய்து வருகிறார். அண்மையில் அரசின் செயல்பாடுகளையும் அரசு வேலைகளில் உள்ளவர்களின் செயல்பாடுகளையும் கண்காணிப்பதற்காக ஒரு பிரத்தியேக குழுவை டிரம்ப் அமைத்தார். அந்த குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஜெய் பட்டாச்சாரியாவுக்கு அமெரிக்க சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக பதவி தந்து கௌரவப்படுத்தியுள்ளார். இவர் தேசிய சுகாதார நிறுவன ஆய்வுகளை மக்களுக்கானதாக மாற்றி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய சுகாதார நிறுவனத்தில் பல மாற்றங்களையும் கொண்டு வருவார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications