ஒண்ணு சொன்னா இன்னொன்னு செய்றீங்களே, இது கேவலமா இல்ல, இதெல்லாம் நியாயமே இல்லை என்று, ஈரான் அரசுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பாணியில் ஆக்ரோஷமாக கர்ஜித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், உலக நாடுகளின் எரிவாயு உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை.
இதற்கிடையில் அந்த வழியாக செல்லும் கப்பல்களிடம் ஈரான் சட்டவிரோதமாக டோல் கேட் அமைத்து வரி வசூலிப்பதாக வரும் தகவல்கள் டிரம்ப்பை உச்சகட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. நாங்க போட்ட ஒப்பந்தம் இது இல்லை என ட்ரூத் சோஷியல் தளத்தில் ஈரான் அதிபரை சாடியுள்ள டிரம்ப்பின் அடுத்த மூவ் என்ன? மீண்டும் போர் மூளுமா? உலக நாடுகளை அச்சுறுத்தும் டிரம்பின் கோபம், அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறாரோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஈரானின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ள டிரம்ப், தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை ஜலசந்தியை ஈரான் கையாளும் விதம் மிக மோசமானது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வழியாக செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதாக வரும் செய்திகளை அடுத்து, டிரம்ப் கொதித்து எழுந்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிப்பதில் ஈரான் மிக மோசமான வேலையை செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் அது கேவலமான ஒரு செயல். அதாவது கெளரமற்ற ஒரு செயல். நாம் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் இதுவல்ல என்று கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் டேங்கர் கப்பல்களிடம் ஈரான் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஈரான் செய்யாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது. ஒரு வேளை கட்டணம் வசூலித்து கொண்டிருந்தால் அதை இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தி உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான கடல் வழித்தடம் ஆகும். அங்கு போர் நிறுத்தம் (Ceasefire) அறிவிக்கப்பட்ட பிறகும், கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதும், சட்டவிரோத கட்டணம் வசூலிப்பதும் சர்வதேச ஒப்பந்தங்களை மீறுவதாகும் என அமெரிக்கா கருதுகிறது. ஆக இந்த சூழலில் தான் மீண்டும் டிரம்பின் இந்த எச்சரிக்கை பதிவானது வந்துள்ளது.
அதிலும் இன்று இஸ்லாமாபாத்தில் நடக்கவிருக்கும் பேச்சு வார்த்தைக்கு முன்னதாக வந்துள்ளது. ஆக இந்த பேச்சு வார்த்தையின் மத்தியில் இது குறித்தும் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய கிழக்கில் காணப்படும் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருமா அல்லது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை ஆதரிப்பதாக கூறினாலும், ஈரான் இன்னும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது டிரம்பின் எச்சரிக்கைக்கு வழிவகுத்துள்ளது.
ஈரான் தரப்பில் இருந்து பார்க்கும்போது, லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் இந்த ஒப்பந்தத்தில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications