உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அதிக அளவில் நிலத்தை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் தன்னுடைய நிறுவனங்களின் மையமாக டெக்சாஸை மாற்ற அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
எலான் மஸ்க், 426 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். தன்னுடைய புதுமையான செயல்பாடுகளாலும் தன்னுடைய புதுமையான தொழில்நுட்ப நிறுவனங்களாலும் புகழ் பெற்றவர் எலான் மஸ்க்.

மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபடும் டெஸ்லா நிறுவனம், விண்வெளி தொழில்நுட்பத்தில் புது புது விஷயங்களை புகுத்தும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் சுரங்க பாதைக்கான திட்டங்களில் முன்னணி தொழில்நுட்பங்களை உருவாக்கி வரக்கூடிய போரிங் நிறுவனம் என இவர் பல்வேறு புதுமையான தொழில்நுட்பங்கள் கொண்ட நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
எலான் மஸ்க் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பெரிய அளவிலான எதிர்கால திட்டங்கள் இருக்கும். அந்த வகையில் அவர் அமெரிக்காவின் டெக்சாஸில் அதிக இடங்களை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. எலான் மஸ்க் தனக்கு சொந்தமான நிறுவனங்களுக்காக 4400 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை வாங்கி வைத்துள்ளார். 3.4 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த நிலத்தை தன்னுடைய நிறுவனங்களின் எதிர்கால திட்டங்களுக்காக அவர் பயன்படுத்தி வருகிறார்.
இதன்படி டெக்சாஸின் ஆஸ்டின் பகுதியில் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் மிகப்பெரிய ஆலை அமைந்துள்ளது. இங்கு டெஸ்லா நிறுவனத்துக்கான முக்கிய ஆய்வு பணிகள் மற்றும் சோதனை பணிகள் நடைபெறுகின்றன.
2,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் டெஸ்லா ஊழியர்களுக்கான வீட்டு வசதி திட்டங்கள் கூட கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது. டெக்சாஸின் டிராவிஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடத்தை சுயசார்பு கொண்ட ஒரு நகரமாக மாற்ற அவர் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
டெக்சாஸின் தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய போகா சிகா என்ற இடத்தில் 900 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கான ராக்கெட்டுகளை மேம்படுத்துவது மற்றும் ராக்கெட்டுகளை சோதனை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து விரைவில் ராக்கெட் ஏவுதலும் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
டெக்சாஸின் பாஸ்ட்ராப் என்ற இடத்தில் எலான் மஸ்கிற்கு சொந்தமான சுரங்கப்பாதை நிறுவனமான போரிங் கம்பெனி 440 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்தி இருக்கிறது. இங்கே சுரங்க பாதை திட்டங்களுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவது மற்றும் சோதனை பணிகளை மேற்கொள்வது, ஊழியர்களுக்கான வீட்டு வசதிகளை ஏற்படுத்தி தருவது ஆகிய பணிகள் நடக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications