அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் நீண்ட காலத்திற்குப் பின் பொருட்களின் விலை நிலவரங்கள் தாறுமாறாக உயர்ந்து இந்நாட்டின் நுகர்வோர் பணவீக்க அளவீடு 4.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 3.6 சதவீதமாக இருந்த வேளையில் 2013ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது நுகர்வோர் பணவீக்கம் அதிகளவில் உயர்ந்துள்ளது.
இதேபோல் வளரும் நாடான இந்தியாவிலும் நுகர்வோர் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஓரே நேரத்தில் வளர்ந்த நாட்டிலும், வளரும் நாட்டிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் என்ன பாதிப்பு ஏற்படும், இந்தியாவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா..?!
அமெரிக்காவின் பணவீக்கம்
அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் இதைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என அச்சம் நிலவுகிறது. மத்திய வங்கிகள் வட்டி குறைக்கும் போது எப்படிப் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தகத்திற்கும் ஏதுவான சூழ்நிலை உருவாகிறதோ அதேபோல் வட்டி விகிதத்தை உயர்த்தும் போது பணம் புழக்கத்தைக் குறைக்கும் போது விலைவாசி கட்டுக்குள் வரும்.
வட்டி உயர்வு
அப்படி அமெரிக்கச் சந்தையில் வட்டி உயர்த்தப்பட்டால் இந்திய பங்குச்சந்தை, கடன் சந்தை, பத்திர என அனைத்திலும் இருக்கும் அமெரிக்க முதலீடுகள் அதிக லாபத்திற்காக இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றப்படும். இது இந்திய சந்தைக்குப் பெரிய பாதிப்பாக இருப்பது மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பில் அதிகளவிலான சரிவை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
விரைவில் தீரும்
ஆனால் அமெரிக்க மத்திய வங்கி இந்தப் பணவீக்கம் பிரச்சனை கூடிய விரைவில் தீரும் என்று நம்புவதால் வட்டி விகிதத்தைச் சமீபத்தை நிதியியல் கூட்டத்திலும் உயர்த்த வில்லை, இதேபோல் அடுத்த சில காலாண்டுகளுக்கும் உயர்த்தப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளது.
பொருளாதார ஊக்க திட்டம்
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்க திட்டம் தான். அமெரிக்கச் சந்தையில் தற்போது போதிய நுகர்வோர் சந்தைக்கான டிமாண்ட் இல்லாத நிலையில் சந்தையில் அதிகளவிலான பணப்புழக்கம் உருவாகியுள்ளது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி
அமெரிக்காவில் இன்னும் பல பிரிவு மக்கள், பல மாநிலங்கள் முழுவதும் மீண்டு வராத நிலையில் உள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் அனைத்து பகுதிகளிலும் மக்கள், வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவை இயல்பு நிலைக்குத் திரும்பும்போது இந்தப் பணவீக்க பிரச்சனை சரியாகிவிடும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது சரியாகாத பட்சத்தில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.


Click it and Unblock the Notifications