286 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மருக்கு ஓவர் டைம்க்கான சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாமல் 9 மாதங்களாக அங்கேயே தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மர் ஆகியோர் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான டிராகன் கேப்சூல் மூலம் இவர்கள் பூமிக்கு திரும்பினர். ஏழு நாட்கள் பயணத்திட்டமாக கடந்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த இவர்கள் எதிர்பாராத விதமாக 286 நாட்கள் விண்வெளியிலேயே தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது.

இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்ததோடு மட்டுமில்லாமல் பல்வேறு உடல் நல பாதிப்புகளையும் சந்திக்க வேண்டி இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் கூடுதல் நாட்கள் விண்வெளியில் இருந்ததற்கு ஊதியம் கிடைக்குமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இரண்டு விண்வெளி வீரர்களுக்கும் கூடுதலாக ஊதியம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள டிரம்ப் யாரும் இதைப் பற்றி இதுவரை என்னிடம் கூறவில்லை, நான் செலுத்த வேண்டும் என்றால் கட்டாயம் என்னுடைய பணத்தை கூட அவர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன் என பதிலளித்தார். அமெரிக்க அரசு கொள்கையின்படி நாசாவில் இருக்கும் விண்வெளி வீரர்கள் அனைவரும் அமெரிக்க அரசு ஊழியர்களாகவே கருதப்படுவர். அவர்களுக்கென ஒரு நிலையான ஊதியம் இருக்கிறது. அவர்கள் எத்தனை காலம் விண்வெளியில் இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் அந்த நிலையான ஊதியம் தான் வழங்கப்படும்.
அது தவிர அவர்களுக்கான போக்குவரத்து செலவு, உணவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நாசாவே பார்த்துக் கொள்ளும். அவர்கள் கூடுதல் நேரம் வேலை பார்த்தால் ஒரு நாளைக்கு ஐந்து அமெரிக்க டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் 430 ரூபாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இவ்வாறு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மருக்கு விண்வெளியில் கூடுதலாக இருந்த காலத்திற்கு என 1430 டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் 1.22 லட்சம் ரூபாய் தான் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவ்விருவருக்கும் விண்வெளியில் இருந்த காலத்திற்கு ஏதேனும் கூடுதலாக ஊதியம் வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி டிரம்பிடம் முன்வைக்கப்பட்டதற்கு "அவ்வளவுதானா அவர்களுக்கு கிடைக்கும், அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு இந்த தொகை போதாது" என டிரம்ப பதில் அளித்தாராம். எனவே கூடிய விரைவில் இந்த இருவருக்கும் கூடுதலாக சம்பளத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications