கலிபோர்னியா: உலகின் முன்னணி சிப் நிறுவனமாக இருக்கக்கூடிய அமெரிக்காவை சேர்ந்த என்விடியா (NVIDIA) நிறுவனத்தில் பணியாற்றுவது ஒரு பிரஷர் குக்கரில் பணியாற்றுவது போல இருக்கிறது என அதன் முன்னாள் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார் . என்விடியா நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த ஒரு ஊழியர் கடந்த மே மாதம் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறினார்.
இது தொடர்பாக ப்ளூம்பெர்க் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள அந்த நபர் என்விடியா நிறுவனத்தில் குறிப்பாக நிறுவனத் தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியா அலுவலகத்தில் வேலை செய்வது பிரஷர் குக்கரில் வேலை செய்வதை போல இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டும், விடுமுறை எடுக்கக் கூடாது ,இரவு 1 மணி முதல் 2 மணி வரையில் கூட வேலை செய்தாக வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிர்பந்தங்கள் ஊழியர்கள் மீது திணிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அங்கே பணியாற்றும் ஊழியர்கள் எப்பொழுதும் மன அழுத்தத்துடன் இருப்பதாகவும் ஆலோசனைக் கூட்டங்களில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது, சண்டை போட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்விடியா நிறுவனத்தில் பணி செய்வது தங்கத்தால் செய்யப்பட்ட சங்கிலியால் நம் கைகளை பூட்டி வைப்பதற்கு சமம் என இதற்கு முன்பு அங்கே மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றிய ஒரு பெண் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 6 முதல் 10 ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்விடியா நிறுவனம் சர்வதேச அளவில் சிப் தயாரிப்பில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு தேவையான சிப் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் ஜென்சிங் ஹுவான் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. இவர் உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.
ஜென்சிங்கை பொருத்தவரை என்விடியா நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் அந்தந்த நாளில் தாங்கள் செய்ய இருக்கும் முக்கியமான ஐந்து வேலைகள் குறித்து கட்டாயம் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியாக வேண்டும். அந்த மின்னஞ்சலை படித்துவிட்டு அவர் ஏதேனும் சந்தேகங்களை எழுப்பினால் அவர்கள் செய்யக்கூடிய வேலைகள் குறித்து விளக்கமான மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டுமாம்.
61 வயதாக கூடிய ஜென்சிங் கடந்த ஆண்டில் நான் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப மாட்டேன் மாறாக சிறப்பாக அவர் வேலை செய்ய வேண்டும் என டார்ச்சர் செய்வேன் என வெளிப்படையாக கூறி இருந்தார்.இந்த நிறுவனத்தில் வேலை அதிகமாக இருந்தாலும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் நிறுவன பங்கும் வழங்கப்படுவதால் பெரும்பாலானவர்கள் இங்கிருந்து வெளியேறுவது கிடையாதாம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications