டெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு இந்தியாவை விட சீனா ஐந்து மடங்கு அதிக கடன் கொடுத்திருப்பது உலக வங்கியின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
சர்வதேச கடன் அறிக்கை 2024 என்ற தலைப்பில் உலக வங்கி பல்வேறு நாடுகளின் கடன்கள் குறித்த விவரங்களை வெளியீடு செய்துள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான் ,வங்கதேசம், மியான்மர் ,இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் ஒட்டுமொத்தமாக 324.6 மில்லியன் டாலர்களை கடன்களாக வைத்திருக்கிறதாம். இதில் பாகிஸ்தான் 130 பில்லியன் டாலர்கள் கடனுடன் முதலிடத்திலும், வங்கதேசம் 101.4 பில்லியன் டாலர்கள் கடனுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

தெற்காசிய பிராந்தியத்தில் நாடுகள் வைத்திருக்கும் கடன்களில் 71% பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இருக்கிறது என உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த நாடுகளுக்கு எல்லாம் இந்தியா ஒட்டுமொத்தமாக 9 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கி இருக்கும் நிலையில் சீனா 48.1 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான்: 3.4 பில்லியன் டாலர்கள் கடன் கொண்டிருக்கும் ஒரு நாடாக இருக்கிறது. இந்த நாட்டிற்கு அதிகபட்சமாக ரஷ்யா கடனை வழங்கியிருக்கிறது. அடுத்ததாக சவுதி அரேபியா, இத்தாலி ஆகிய நாடுகள் அதிக அளவில் கடனை வழங்கியுள்ளன. இது தவிர ஆசிய மேம்பாட்டு வங்கி ,சர்வதேச நாணய நிதியம் ஆகியவையும் ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கியுள்ளன. இந்தியா, சீனா ஆகியவை ஆப்கானிஸ்தானுக்கு எந்த ஒரு நிதி உதவியும் வழங்கவில்லை.
பூட்டான்: அதிகபட்சமாக இந்தியா தான் இந்த நாட்டிற்கு கடனை வழங்கியுள்ளது. அதாவது பூட்டான் அரசு 3.3 பில்லியன் டாலர்கள் கடனை கொண்டிருக்கிறது. இதில் இந்தியாவிற்கு அந்த நாடு 2.1 பில்லியன் கடன் பட்டிருக்கிறது.
வங்கதேசம்: 101.4 பில்லியன் டாலர்கள் கடனைக் கொண்டிருக்கிறது . வங்கதேசம் சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து தலா 9 பில்லியன் டாலர்களை வாங்கி இருக்கிறது. அதிகபட்சமாக இந்த நாட்டிற்கு ஜப்பான் மற்றும் உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கிகள் தான் அதிக கடனை வழங்கியிருக்கின்றன. ஜப்பானுக்கு இந்த நாடு 15.2 மில்லியன் டாலர்களை கடனாக வைத்திருக்கிறது.
மாலத்தீவு: இந்த நாடு 4 பில்லியன் டாலர்களை கடனாக வைத்திருக்கிறது. இதில் 640 மில்லியன் டாலர்கள் கடன் இந்தியா வழங்கியது. சீனா இந்த நாட்டிற்கு 960 மில்லியன் டாலர்கள் கடனை வழங்கியுள்ளது. சீனாவை பொறுத்தவரை தன்னுடைய பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேட்டிவின் ஒரு பகுதியாக மாலத்தீவுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு கடன்களை வழங்கிய வண்ணம் இருக்கிறது.
மியான்மர்: இந்தியா மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர் கூடிய மியான்மர் 12.1 பில்லியன் டாலரை கடனாக வைத்திருக்கிறது. இதில் சீனாவுக்கு 720 மில்லியன் டாலர்களை இந்த நாடு வழங்க வேண்டும்.
நேபாளம்: 9.9 பில்லியன் டாலர்கள் கடனை கொண்டு இருக்கிறது. இதில் பெரும்பாலானவை உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றவை ஆகும். இதில் சீனாவும் இந்தியாவும் தலா 300 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கி இருப்பது தெரிய வருகிறது இந்த நாட்டிற்கு ஜப்பான் 500 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கி இருக்கிறது.
பாகிஸ்தான்: 130 பில்லியன் டாலர்கள் கடனை கொண்டிருக்கும் ஒரு நாடாக இருக்கிறது. இதில் 28.6 பில்லியன் டாலர்களை சீனாவே வழங்கியிருக்கிறது. அதாவது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடனில் 22 சதவீதம் சீனா வழங்கியது. மீதமுள்ள அனைத்தும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கிகள் சார்பாக வழங்கப்பட்டவை.
இலங்கை: மொத்தம் 61.7 பில்லியன் டாலர்கள் கடனைக் கொண்டிருக்கிறது. இதில் இந்தியா வழங்கியது 6.1 பில்லியன், சீனா வழங்கிய கடன் 8.64 பில்லியன் டாலர்கள் ஆகும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications