முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். திட்டம் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 15இல் தொடங்கினாலும் ஜூன் 22ஆம் தேதி முதலே முன் தேதியிட்டு பய்னாளிகளுக்கு மோதிரம் வழங்கப்படும். அதாவது விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தில் 1 கிராம் தங்க மோதிரம் கிடைக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 13560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் படி பார்த்தால் தங்க மோதிரம் ஒரு கிராம் வாங்க வேண்டும் அதற்கு 12% சதவீத செய்கூலி சேதாரம் , 3% ஜிஎஸ்டி ஆகியவற்றுடன் சேர்த்து நாம் கணக்கீடு செய்தால் தங்கத்தின் விலை 13,560 ரூபாய், செய்கூலி மற்றும் சேதாரம் 1627 ரூபாய், ஜிஎஸ்டி 456 ரூபாய் என ஒரு தங்க மோதிரம் வாங்குவதற்கு அரசு இன்றைய தங்கத்தின் விலை நிலவரத்திற்கு 15,643 ரூபாயை செலவிட வேண்டும்.
தற்போதைக்கு தமிழக அரசு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக ஓராண்டுக்கு 755.83 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. தன்னுடைய குழந்தைக்கு ஒரு பொட்டு தங்கமாவது போட்டு பார்க்க வேண்டும் என்பது லட்சக்கணக்கான ஏழை தாய்மார்களின் ஏக்கம். அந்த ஏக்கத்தை நிறைவேற்றும் வகையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளை நாடி வருவது கணிசமாக அதிகரிக்கும். இது பாதுகாப்பான மற்றும் தரமான பிரசவங்களை ஊக்குவிக்கும். பிறக்கும் போதே ஒரு குழந்தைக்கு தங்க மோதிரம் என்ற எளிய மக்களின் எட்டாக்கனியை இந்தத் திட்டம் சாத்தியமாக்குகிறது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ அரசாணையின்படி, "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்" கீழ் பயன்பெற தேவையான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
அரசு மருத்துவமனை பிரசவம்: இத்திட்டத்தின் மிக முக்கியமான தகுதி, குழந்தை அரசு மருத்துவமனைகளில் (Government Hospitals / PHCs) பிறந்திருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
தமிழக இருப்பிடம்: குழந்தையின் பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேதி வரம்பு: 22 ஜூன் 2026 அன்றிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள்.
1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் மற்றும் குழந்தைகளுக்கான குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பு வழங்கப்படும். இத்திட்டம் அரசு மருத்துவமனைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இதற்காகத் தனியாகத் தேடி அலைந்து விண்ணப்பிக்கத் தேவையில்லை.
கர்ப்பிணிப் பெண்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்களின் கர்ப்ப காலத்தைப் பதிவு செய்யப் பயன்படுத்தும் PICME மென்பொருள் மூலமாகவே இத்திட்டத்திற்கான விவரங்களும் தானியங்கி முறையில் சேகரிக்கப்படும். குழந்தை பிறந்தவுடன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகமே குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆவணங்களைப் பெற்று இத்திட்டத்திற்குப் பதிவு செய்யும். எனவே வெளியே எங்கும் விண்ணப்பிக்க தேவையில்லை. கர்ப்பம் அடைந்த உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பதிவு செய்ய வேண்டும் என்பதால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை அப்போதே வழங்கி இருப்பீர்கள் எனவே புதிதாக ஆவணம் எதுவும் சமர்ப்பிக்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications


