ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் உணவகங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்துவிட்டன. இதனால் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. கூடிய விரைவில் இலட்சக்கணக்கான உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதால் கைவசம் இருக்கக்கூடிய இருப்பைக் கொண்டு வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை தருவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன. இந்த சூழலில் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கக்கூடிய அனைத்து குடும்பத்தினருக்கும் மத்திய அரசு மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.

மத்திய பெட்ரோலிய மற்றும் எரிவாயு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி வாடிக்கையாளர்களும் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகரிப்பு முறையை முடிக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்து இருக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர் நுகர்வோர் அனைவரும் இ கேஒய்சி முடிப்பது கட்டாயம் என்றும் இது மிகவும் எளிமையான நடைமுறைதான் என்றும் தெரிவித்திருக்கிறது.
சில நிமிடங்களிலேயே உங்களுடைய வீட்டில் இருந்தபடியே இந்த கேஒய்சி நடைமுறையை முடித்து விடலாம் என மத்திய அரசு அதில் தெரிவித்து இருக்கிறது. இதற்கான லிங்கினையும், எப்படி ஆன்லைன் வாயிலாகவே முடிப்பது என்ற வழிகாட்டுதல்களையும் அதில் வெளியிட்டு இருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கக்கூடிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகியவற்றில் எந்த நிறுவனத்தில் நீங்கள் சிலிண்டர் வாங்குகிறீர்களோ அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதனை அடுத்து லாகின் செய்து உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண், கஸ்டமர் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் Aadhaar FaceRD செயலி மூலம் முக அடையாள சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். அவ்வளவு தான் சிலிண்டர் இணைப்புக்காக இ கேஒய்சி முடிந்துவிட்டது.
ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள், கேஸ் இணைப்பு வாங்கிய அலுவலகத்திற்கு கேஸ் இணைப்பு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றை கையில் கொண்டு சென்றும் கேஒய்சியை முடித்து கொள்ளலாம். ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. சிலிண்டர் பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யப்படாமல் உள்ளது. இந்த சூழலில் கேஒய்சி-ஐ காரணம் காட்டி சிலிண்டர் டெலிவரி தடைபட்டுவிடக் கூடாது. எனவே கேஒய்சி முடிக்காதவர்கள் முடித்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications