சென்னை: வங்கி விதிமுறைகளைப் புரிந்துகொள்வது கொஞ்சம் சிக்கலாக இருக்கும். ஆனால் அவற்றை அறிந்து கொள்வது எதிர்பாராத பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றும். உங்கள் பண பரிவர்த்தனைகள் சீராகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமானால் அனைத்து வங்கி விதிமுறைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் பணம் டெபாசிட் செய்வதற்கு பான் கார்டு அவசியமா என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பான் எண் என்றால் என்ன?: பான் கார்டு என்பது வருமான வரித்துறை (Income Tax Department) வழங்கும் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். நாட்டில் KYC சரிபார்ப்புக்குப் பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்களாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளது. பான் என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்துவமான 10 இலக்க எண் ஆகும். நம் நாட்டில் வரி செலுத்தும் அனைவருக்கும் பான் கார்டு அவசியமாகிறது.

பணம் டெபாசிட் செய்ய பான் கார்டு தேவையா?: இந்தியாவில், செய்யப்படும் அனைத்து டெபாசிட்களுக்கும் பான் கார்டு தேவை இல்லை. ஆனால், ஒரு நாளில் ரூ. 50,000-திற்க்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யும் போது, உங்கள் பான் கார்டு எண்ணை வங்கிக்கு கொடுக்க வேண்டும். மேலும், ஒரு நிதி ஆண்டில் உங்கள் மொத்த பணம் டெபாசிட் ரூ.20 லட்சத்தை தாண்டினால், உங்கள் பான் கார்டு எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இது உங்கள் அனைத்து வங்கி கணக்குகள் மற்றும் அஞ்சல் அலுவலக கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு பொருந்தும்.
சிபிடிடி (CBDT) செய்த மாற்றம்: 2022 ஆம் ஆண்டில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) ஒரு நிதி ஆண்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணம் டெபாசிட் செய்யும்பொது அல்லது பணம் எடுக்கும் போது தனிநபர்கள் தங்கள் பான் அல்லது ஆதார் எண்ணைக் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தியது. இது வங்கிகள் அல்லது அஞ்சல் நிலையங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும்.
அதே போல ஒரு நிதி ஆண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்குகளில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் பணம் டெபாசிட் செய்யும் போது அல்லது எடுக்கும் போது, பான் அல்லது ஆதார் எண்ணைக் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இந்த ரூ.20 லட்சம் வரம்பு என்பது ஒரு ஆண்டிற்குள் செய்யப்படும் அனைத்து டெபாசிட்கள் அல்லது பணம் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
அத்தகைய பரிவர்த்தனைகளைச் செய்யத் திட்டமிடும் எவரும், பரிவர்த்தனை தேதிக்கு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்னதாக, பான் கார்டு இல்லை என்றால், பான் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications