இந்திய பங்குச் சந்தையில் பென்னி ஸ்டாக்ஸ் மற்றும் மைக்ரோ-கேப் பங்குகளில் முதலீடுகள் எப்போதும் இல்லாமல் பெரிய அளவில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் 300% முதல் அதிர்ச்சியூட்டும் 65,000% வரை ஏற்றம் கண்டுள்ளன.
கடந்த ஒரு மாதமாக பங்குச்சந்தை மந்தமாக இருந்தாலும், இந்த ஆண்டு ஆரம்பம் முதல் பங்குச்சந்தை மிகவும் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து 52 வார உச்சத்தை தொட்டது. இந்த உற்சாகம் காரணமாக குறைந்த லாபம் ஈட்டும் நிறுவனங்களிலும் கூட முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இப்படி தடாலடி வளர்ச்சியை பதிவு செய்த 200 நிறுவன குழுவில் உள்ள 99 நிறுவனங்கள், 2024 நிதியாண்டில் ரூ.10 கோடிக்கும் குறைவான நிகர வருவாய் மட்டுமே பதிவு செய்துள்ளன. ஆனாலும் அதிகப்படியான பங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஸ்ரீ அதிக்காரி பிரதர்ஸ் டெலிவிஷன்: இந்த 200 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் ஸ்ரீ அதிக்காரி பிரதர்ஸ் டெலிவிஷன் நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும். இந்த நிறுவனத்தின் பங்கு விலை 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ரூ.3 லிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று ரூ.2,198 ஆக உயர்ந்து அதிரடியான வளர்ச்சியை பதிவு செய்து முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதன் விளைவாக ஸ்ரீ அதிக்காரி பிரதர்ஸ் டெலிவிஷன் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.4,600 கோடியாக அதிகரித்துள்ளது. இதேவேளையில் இந்நிறுவனம் விற்றுமுதல் வெறும் ரூ.3 கோடி மட்டுமே, 2024 ஆம் நிதியாண்டில் ரூ.21 கோடி இழப்பையும் பெற்றுள்ளது.
மார்சன்ஸ், ஆயுஷ் உணவு மற்றும் ஹெர்ப்ஸ்: டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் நிறுவனமான மார்சன்ஸ் நிறுவனம் ரூ.6.43 கோடி மட்டுமே விற்றுமுதல் மற்றும் ரூ.63 லட்சம் என்ற லாபத்தை கொண்ட நிறுவனத்தின் பங்கு விலை அதிர்ச்சியூட்டும் 4,478% உயர்ந்துள்ளது. இதனால் அதன் சந்தை மூலதனம் ரூ.3,765 கோடியை எட்டியுள்ளது.
இதேபோல் வெரும் ரூ.60 லட்சம் மட்டுமே விற்றுமுதல் கொண்ட ஆயுஷ் உணவு மற்றும் ஹெர்ப்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 4,155% உயர்ந்துள்ளது. இதனால் அதன் சந்தை மூலதனம் ரூ.671 கோடியை எட்டியுள்ளது.
எச்சரிக்கை: ரூ.10 கோடிக்கு கீழ் நிகர விற்பனை கொண்ட 36 நிறுவனங்களில், கடந்த ஒரு வருடத்தில் அதன் பங்கு விலை 1,000% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
இதில் முக்கியமாக ஹிந்துஸ்தான் அப்ளைன்சஸ், வேன்டேஜ் நாலெட்ஜ் அகாடமி, பிட்ஸ், ஏஸ் எஞ்சிடெக், ஒஸ்வால் யார்ன்ஸ், எபிக் எனர்ஜி, ஐஎம்இசி சர்வீசஸ், சீனிக் எக்ஸ்போர்ட்ஸ் (இந்தியா), அகமதாபாத் ஸ்டீல் கிராஃப்ட், தஹ்மார் என்டர்பிரைசஸ் போன்றவை குறைந்த வருவாய் இருந்தபோதிலும் பங்கு விலை பெரும் உச்சத்தை தொட்டு உள்ளது.
பென்னி மற்றும் மைக்ரோ-கேப் பங்குகளில் ஏற்பட்டுள்ள இந்த அதீத முதலீடுகள் சந்தையில் ஊகத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும், குறைந்த நிதி செயல்திறன் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதில் உள்ள அபாயங்களையும் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications