மும்பை:மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவன பங்குகளை 1:2 என பிரிப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு பங்குக்கு ரூ. 8.85 என டிவிடெண்ட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது. மத்திய அரசு மற்றும் இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு துறை உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் பங்குகளை பிரிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கினை ரூ.5 முக மதிப்பு கொண்டு இரண்டு பங்குகளாக பிரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அண்மையில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் பங்குகளை பிரிக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பங்குதாரர்களுக்கு தகவல் அளித்து வாக்கெடுப்பு நடத்திய பின்பு பங்கு பிரிப்புக்கான நடைமுறைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் கூட்டத்தில், ஒரு பங்குக்கு ரூ.8.85 என டிவிடெண்ட் வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் இது பங்குதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
அண்மையில் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஎஸ்ஓ ஆக காயத்ரி பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார், அவர் நிறுவனத்தின் நிதித்துறை சார்ந்த பொது மேலாளராக இருந்து வந்தார்.
பங்குகள் பிரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானதை அடுத்து பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் பங்கின் மதிப்பு 3% வரை உயர்ந்துள்ளது.பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் பங்கானது இரண்டு ஆண்டுகளில் 104 % லாபத்தையும் மூன்றாண்டுகளில் 375 % லாபத்தையும் தந்துள்ளது. இந்த மிட்கேப் பங்கானது ஓர் ஆண்டு காலத்தில் 86% வளர்ச்சியை கண்டுள்ளது.
பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 30,453 கோடி ரூபாய் என உள்ளது. நிறுவனத்தின் நிகர மதிப்பு 3,211 கோடி ரூபாய் ஆகும். வருவாயை பொறுத்தவரை 2,645 கோடி ரூபாயாகவும், லாபம் 352 கோடி ரூபாயாகவும் உள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குகளில் 74.93% புரமோட்டர்களிடமே இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகள் 9.28% பங்குகளையும், சில்லறை முதலீட்டாளர்கள் 8.65% பங்குகளையும் வைத்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications