மும்பை: இந்திய பங்குச்சந்தையில் சிறு நிறுவனங்கள் பெரிய லாபம் தந்து முதலீட்டாளர்களை திக்கு முக்காட செய்து விடும். அப்படி ஒரு நிதிச் சேவை நிறுவனம் 671% லாபத்தை தந்துள்ளது.
ப்ளூ சிப் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஓராண்டு காலத்தில் மிகப்பெரிய அளவில் லாபத்தை ஈட்டி தந்துள்ளன. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது ரூ. 0.35 என இருந்த நிலையில், தற்போது ரூ.2.70 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் 671% என இந்த பங்கின் மதிப்பானது உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த பங்கின் மதிப்பானது 2600% அதிகரித்துள்ளது. ப்ளூ சிப் இந்தியா நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.0.1 ஆக இருந்தது. தற்போது ரூ.2.70 என உயர்வு கண்டுள்ளது இது கிட்டத்தட்ட 2006% அதிகமாகும்.
2024 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த மூன்று மாத காலங்களில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% உயர்ந்துள்ளது. ப்ளூ சிப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கி வரும் ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஈக்விட்டி பங்குகளை விற்பனை செய்வது மற்றும் கடன்களை வழங்குவது போன்று நிதி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
1993 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ப்ளூ சிப் இந்தியா நிறுவனம் நிறுவப்பட்டது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் என்பது 0.02 கோடி ரூபாயாக இருந்தது.
ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின் அடிப்படையில் ஆண்டு வருவாய் வலுவாக இருப்பது மற்றும் படிப்படியாக லாபம் உயர்ந்து வருவது ஆகியவற்றை பார்க்கும்போது ப்ளூ சிப் இந்தியா நிறுவனம் வலுவான ஒரு பங்காக இருக்கிறது என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தின் ரிட்டர்ன் ஆன் கேப்பிட்டல் எம்ப்ளாயிண்ட் எனப்படும் ஆர்ஓசிஇ என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வருகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . ஆனால் வருவாய் மற்றும் லாபம் குறைந்த அளவில் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளூ சிப் இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பாலானவை சில்லறை முதலீட்டாளர்கள் வசம் இருக்கின்றன. சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 88.75% பங்குகளும் புரமோட்டர்களிடம் 11.25 % பங்குகளும் உள்ளன. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.15 கோடி ஆகும். நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications