பிரான்ஸை சேர்ந்த நிதி சேவை நிறுவனமான பி.என்.பி. பரிபாஸ் தனது இந்திய சில்லரை பங்கு தரகு நிறுவனமான Sharekhan-ஐ சுமார் ரூ.3,000 கோடிக்கு தென்கொரியாவின் மிரே அசெட் பைனான்சியல் குழுமத்துக்கு விற்பனை செய்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தாகி விட்டது என்றும், இது குறித்த விவரங்களை மிரே அசெட் குழுமம் தென்கொரிய பங்குச்சந்தையில் தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது.
பி.என்.பி. பரிபாஸ் தற்போது விற்பனை செய்துள்ள ஷேர்கான் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் பல முறை கை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகப்படுத்திய தரகர்களில் ஒருவரான ஸ்ரீபால் மொராக்கியா, பங்கு தரகு நிறுவனமான ஷேர்கானை தொடங்கினார். இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளில் பல கை மாறியுள்ளது.
பி.என்.பி. பரிபாஸ் அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு முன், சிட்டி வென்ச்சர் கேபிடல் இன்டர்நேஷனல் உள்ளிட்ட தனியார் பங்கு நிறுவனங்களின் குழுவிடம் இருந்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிதி சேவை நிறுவனமான பி.என்.பி. பரிபாஸ், இந்தியாவின் தரகு மற்றும் நிதிச் சேவை சந்தையில் வலுவாக காலூன்றும் நோக்கில் நம் நாட்டின் முன்னணி பங்கு தரகு நிறுவனங்களில் ஒன்றான ஷேர்கானை கையகப்படுத்தியது.
2015ல் ஷேர்கானை கையகப்படுத்துவதாக பி.என்.பி. பரிபாஸ் அறிவித்தது. இருப்பினும் 2018ல் தான் இந்த கையகப்படுத்தும் நடடிவக்கை நிறைவடைந்தது. தனியார் பங்கு நிறுவன குழுவிடம் இருந்து ஷேர்கானை சுமார் ரூ.2,100 கோடிக்கு வாங்கியது.
தற்போது ஷேர்கான் நிறுவனம் 29 லட்சம் வாடிக்கையாளர்களையும், 4,000க்கும் மேற்பட்ட வணிக கூட்டாளர்களையும் கொண்டுள்ளது. கடந்த நவம்பர் 10ம் தேதி நிலவரப்படி, ஷேர்கான் நிறுவனத்தில் 4,800 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் முதலீட்டு சொத்து மதிப்பு ரூ.83,000 கோடியாக உள்ளது.
பி.என்.பி. பரிபாஸ் நிறுவனம் தனது முக்கிய வர்த்தகமான வங்கி வணிகத்தில் கவனம் செலுத்த விரும்புகிறது. அதனால் தற்போது ஷேர்கான் நிறுவனத்தை கொரிய நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறது.
முன்னதாக, மியூச்சுவல் பண்ட் மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் வணிகங்களில் இருந்தும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பரிபாஸ் முதலீடடு வங்கி மற்றும் பிரான்சின் முன்னணி வங்கியான பி.என்.பி. ஆகியவற்றின் இணைப்பிற்கு பிறகு 2,000ம் ஆண்டில் பி.என்.பி. பரிபாஸ் குழுமம் உருவாக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications