நேற்று வரை சென்செக்ஸ் 38,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் ஆகும் எனச் சொன்னால் சத்தியமாக யாரும் நம்பி இருக்கமாட்டோம். நேற்று வரை அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பு, சவுதி அராம்கோ நிறுவனத்தின் மீது நடந்த ட்ரோன் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை பெரிய ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாவது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பது என பல காரணங்களால் இந்திய சந்தை மேலும் மேலும் சரிந்து கொண்டிருந்தது.
ஆனால் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார்ப்பரேட் வரி விகித மாற்றம் என்கிற ஒரே ஒரு அறிவிப்பில், ஒட்டு மொத்த இந்திய சந்தையின் மன நிலையையும், சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் செண்டிமெண்டையும் முழுமையாக மாற்றிவிட்டார். ஒற்றை அறிவிப்பால் சந்தை பட்டாசாக சுமார் 2,285 புள்ளிகளை வரை ஏற்றம் கண்டு இருக்கிறது. சென்செக்ஸ் ஒரே நாளில் 37000, 37,410, 37,750 என மூன்று ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளை அசால்டாக கடந்து இருக்கிறது என்பதால் ஆச்சர்யம் அதிகமாகத் தான் இருக்கிறது.

சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நாளையும் இந்த கார்ப்பரேட் வரி விகித அறிவிப்பு செய்திக்கான மொமெண்டம் இருக்குமா..? இல்லை இதற்கு முன்னால் சொன்ன அறிவிப்புகள் போல, அடுத்த நாளே பிசுபிசுத்து விடுமா என்கிற பயமும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. பெரும்பாலும் வரும் திங்கட்கிழமை சந்தை ஓரளவுக்கு நிலையாக 37,750 லெவல்களிலேயே தொடரும் எனவும் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
சரி ஒருவேளை திங்கட்கிழமை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 37,750 புள்ளிகள் முதல் சப்போர்ட்டாகவும், 37,410 அடுத்த சப்போர்ட்டாகவும் இருக்கும். ஒருவேளை ஏற்றம் காணத் தொடங்கினால் 38,500 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம்.
இன்று காலை சென்செக்ஸ் 36,214 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,014 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 1921 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,746 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,274 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 570 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 44 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,736 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,853 பங்குகள் ஏற்றத்திலும், 738 பங்குகள் இறக்கத்திலும், 145 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,736 பங்குகளில் 71 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 120 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று பி எஸ் இ இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் சுமார் 5 % ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோ, வங்கி, நிதி, கேப்பிட்டல் கூட்ஸ் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, ஹெச் டி எஃப் சி, ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.ஈஷர் மோட்டார்ஸ், ஹிரோ மோட்டோகார்ப், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
பவர் கிரிட் கார்ப், ஜி எண்டர்டெயின்மெண்ட், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், என் டி பி சி போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.06-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 63.75 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications