இன்று சந்தையில் ஏகப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், தங்களின் காலாண்டு முடிவுகளினால் விலை அதிகரித்துக் கொண்டிருப்பதாகச் செய்திகளைப் பார்க்க முடிகிறது. ஜுபிலண்ட் ஃபுட்வொர்க், வெல்ஸ்பன் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கோட்டக் மஹிந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ லோம்பார்ட் என பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சிறப்பாகவும், தரமான லாபம் பார்த்திருக்கின்றன. இருப்பினும் சில நிறுவன பங்குகளின் விலை கணிசமாக அதிகரிக்கவில்லை.
எனவே சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் 39,000 புள்ளிகளை தக்க வைத்துக் கொள்ள முடியாமல், இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. குறிப்பாக இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளின் விலை மட்டும் 16.6 சதவிகிதம் சரிந்து, 767 ரூபாய்க்கு வியாபாரமான பங்குகள் தற்போது 640 ரூபாய்க்கு கிடைத்து வருகிறது. இதுவும் சென்செக்ஸின் ஒட்டு மொத்த சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை சந்தை நாளையும் இந்த டிரெண்டைப் பின் பற்றி ஏற்றம் கண்டால் கூட, 39,500 புள்ளிகளைக் கடப்பது பெரிய விஷயம் தான். காரணம் 39,500 லெவல்களை கடந்த ஜூலை 05-ம் தேதிக்குப் பின் ஒரு முறை கூட சென்செக்ஸ் இந்த 39,500 லெவல்களைத் தொட்டதில்லை என்பது டெக்னிக்கலாக ஒரு நெகட்டிவ் செய்தியாக இருக்கிறது. ஒருவேளை அதையும் மீறி நல்ல ஏற்றம் கண்டால், 39,500-ஐக் கடந்தால், அடுத்த டார்கெட் 39,750 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். ஆக டார்கெட் 40,500 என வைத்துக் கொள்ளலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் பெல் செய்தியிலேயே, ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 39,000 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு நாள் மட்டுமே 39,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவு அடைந்து இருப்பதால் அதை வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அடுத்த வலுவான சப்போர்ட்டாக 38,700-ஐ எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே சென்செக்ஸால் 39,000 புள்ளிகளுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் சரிந்திருக்கிறது. எனவே, 38,500-ஐ அடுத்த சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 39,298 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39233 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,963 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 334 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,657 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,588 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 73 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 27 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,759 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,260 பங்குகள் ஏற்றத்திலும், 1,293 பங்குகள் இறக்கத்திலும், 206 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,759 பங்குகளில் 84 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 219 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஆட்டோ, ஐடி, மிடியா, மெட்டல் தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கி, பார்மா நிதி சேவைகள் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், ஐசிஐசிஐ பேங்க், பாரத் பெட்ரோலியம், டைடன் கம்பெனி, சிப்லா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச் சி எல் டெக், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.99-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 59.31 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications