மும்பை: சில நாட்களுக்கு முன் இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா அவர்களே சந்தை எப்போது மேம்படும் எனத் தெரியவில்லை. அரசு தன்னால் ஆன பொருளாதார நடவடிக்கைகளை செய்து வருகிறது. தற்போது சந்தை நிலவரங்களைப் பார்க்கும் போது, இது பங்குகளை வாங்க சரியான நேரம் என நான் நம்புகிறேன். ஆனால் சந்தை உடனடியாக ஏற்றம் கண்டு நமக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது என தன் கவலையை நேரடியாக வெளிப்படுத்தினார்.
அவர் சொன்ன வார்த்தைகளை சாதாரண மக்களும் சரி, முதலீட்டாளர்கள் தொடங்கி சில்லறை வர்த்தகர்கள் வரை இன்னும் முழுதாக படித்து முடிக்கவில்லை. அதற்குள் சந்தை சரமாரியாக அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 23, 2019 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை மேம்படுத்தச் சொன்ன விஷயங்கள், அடுத்த இரண்டு நாட்கள் மட்டுமே சந்தை வர்த்தகத்தை உயர்த்தியது. மூன்றாவது நாளே சந்தை சரிவைக் காணத் தொடங்கியது.
அதன் பின் கடந்த ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை அன்று வங்கிகள் இணைப்பு குறித்து பேசினார் நிர்மலா சீதாராமன். நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் சந்தை விடுமுறையாக இருந்தது. ஆனால் இன்று ஒரே நாளில் சுமார் 750 புள்ளிகள் சரிந்து பெரிய அடி வாங்கி இருக்கிறது. குறிப்பாக பொதுத் துறை வங்கிகள் இண்டெக்ஸ் பலமான அடி வாங்கி இருக்கிறது.
சென்செக்ஸ் நாளையும் இறக்கம் காணத் தொடங்கினால் சார்ட் 36,400 முதல் நிலை சப்போர்ட்டாகவும், 36,000 புள்ளிகள் இரண்டாவது பெரிய சப்போர்ட்டாகவும் இருக்கும். ஒருவேளை ஏற்றம் கண்டால் 37,000 மற்றும் 37,410 ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.
இன்று காலை சென்செக்ஸ் 37,181 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 36,562 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 769 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,960 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,797 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 225 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டிருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 02 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 02 பங்குகள் ஏற்றத்திலும், 48 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,608 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 813 பங்குகள் ஏற்றத்திலும், 1,616 பங்குகள் இறக்கத்திலும், 179 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,608 பங்குகளில் 31 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 207 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் அனைத்து துறை சார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பொதுத் துறை வங்கிகள், மெட்டல், எனர்ஜி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் கூடுதல் இறக்கத்தில் வர்த்தகமாயின.
யெஸ் பேங்க், ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி, இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. டெக் மஹிந்திரா, ஹெச் சி எல் டெக்னாலஜி, பாரத் பெட்ரோலியம், பிரிட்டானியா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஐசிஐசிஐ பேங்க், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அல்ட்ராடெக் சிமெண்ட், டைடன் கம்பெனி, டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.33-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 58.12 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications