இன்று காலையில் இரண்டாவது நாளாக வரலாற்று உச்சத்தில் தொடங்கிய சந்தைகள், முடிவில் சற்று சரிவில் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக சென்செக்ஸ் 49.96 புள்ளிகள் குறைந்து, 52,104.17 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 1.25 புள்ளிகள் குறைந்து, 15,313.45 ஆகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1354 பங்குகள் ஏற்றத்திலும், 1573 பங்குகள் சரிவிலும், 160 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளன.
தொடர்ச்சியாக கடந்த நான்கு வர்த்தக அமர்வுகளாக சந்தை புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், இன்று முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்த காரணத்தினால் சற்று சரிவினைக் கண்டு வருகின்றது.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமின்றி 72.71 ரூபாயினை தொட்டுள்ளது. இன்று காலையில் சற்று ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், முடிவில் சற்று சரிவில் முடிந்துள்ளது.
இதற்கிடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர்கிரிட் கார்ப், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், நெஸ்டில், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் பவர்கிரிட் கார்ப், ஓஎன்ஜிசி, என்டிபிசி, கோடக் மகேந்திரா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, நெஸ்டில், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
புதிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, ஊக்கத்தொகை பற்றிய முக்கிய அறிவிப்பினை இன்று அந்த நாட்டு அரசு ஒப்புதல் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. அதோடு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பல கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆக இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
எனினும் கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் தங்களது லாபத்தினை புக் செய்திருக்கலாம். இதனால் சந்தை சற்று சரிவில் முடிவடைந்துள்ளது.