இந்திய பங்கு சந்தை தொடர்ந்து 9வது நாளாக உயர்வுடன் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தினை முடித்துக்கொண்டது. மூன்று வருடங்களுக்குப் பிறகு சென்செக்ஸ் தொடர்ந்து 9 வது நாளாக உயர்ந்துள்ளது.
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 89.63 புள்ளிகள் என 0.26 சதவீதம் உயர்ந்து 34,395.06 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 20.35 புள்ளிகள் என 0.19 சதவீதம் உயர்ந்து 10,548.70 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான அறிக்கை
இன்றைய பங்கு சந்தையில் மெட்டல், எப்எம்சிஜி, எண்ணெய் & எரிவாயு மற்றும் குறிப்பிட்ட நிதி துறை பங்குகள் உயர்வைச் சந்தித்தன. அதே நேரம் ஐடி துறை பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. சென்ற நிதி ஆண்டிற்கான 4-ம் காலாண்டு அறிக்கையினை இன்ஃபோசிஸ் நிறுவனம் வாசித்த பிறகு இரண்டு நாட்களாக நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளது.
லாபம் ஈட்டிய பங்குகள்
பவர் கிரிட், எச்யூஎல், டைட்டன், என்டிபிசி மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் இன்று 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, அதானி போர்ட்ஸ், விப்ரோ, மாருதி, யெஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் இன்று நட்டத்தினை அளித்துள்ளன.
பருவமழை
திங்கட்கிழமை இந்திய வானியல் துறை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் பருவமழை பொழிவு சாதாரணமாகவே இருக்கும் என்று கணித்து இருப்பதால் 2018-2019 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.6 சதவீதமாக உயரும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்திய அரசு கிராமப்புற வளர்ச்சிக்காக நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில அதிகளவில் நிதியை ஒதுக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications