பங்குச் சந்தையில் மேற்கொள்ளும் முதலீட்டுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் இப்போது பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர். அதேசமயம் பங்கு விலை எப்போது ஏறும் இறங்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
சில பங்குகளின் விலை பல ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கும். சில பங்குகள் ஒரு சில மாதங்களிலேயே பல மடங்கு லாபம் கொடுத்து விடும். அந்த மாதிரி ஒரு சில மாதங்களில் முதலீட்டாளர்களை பல மடங்கு லாபம் கொடுத்த ஒரு மல்டிபேக்கர் பங்கான செல்கோர் கேஜெட்ஸ் பற்றி பார்ப்போம்.

2020ல் செல்கோர் கேஜெட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் டி.வி., ஸ்மார்ட்வாட்ச், மொபைல்போன்கள் உள்ளிட்ட நுகர்வோர் எலக்ட்ரானிக் சாதனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. செல்கோர் கேஜெட்ஸ் அண்மையில் ஐ.பி.ஓ.வில் களமிறங்கி நிதி திரட்டியது.
இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ. கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கியது. வெளியீட்டுக்கான ஒரு பங்கின் விலை ரூ.87-90 என நிர்ணயம் செய்யப்பட்டது. செப்டம்பர் 20ம் தேதி நிறைவடைந்தது. வெளியீட்டு அளவை காட்டிலும் 116.33 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதனால் இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ. மெகா ஹிட் அடித்தது.
கடந்த செப்டம்பர் 28ம் தேதியன்று தேசிய பங்குச் சந்தையில் SME தளத்தில் செல்கோர் கேஜெட்ஸ் பங்குகள் ரூ.92 என்ற விலையில் பட்டியலிடப்பட்டன. அன்றைய தினம் அப்பங்கின் விலை குறைந்தபட்சமாக ரூ.88.15 வரை இறங்கியது ஆனால் பின்னர் மளமளவென ஏற்றம் கண்டது.
அதன் பிறகு இப்பங்கின் விலை அதற்கு கீழ் குறையவே இல்லை. அண்மையில் இப்பங்கின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.269ஐ எட்டியது. தற்போது இப்பங்கின் விலை ரூ.258 என்ற அளவில் உள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 3 மாதங்களுக்குள் செல்கோர் கேஜெட்ஸ் பங்கு சுமார் 3 மடங்கு ஆதாயம் அளித்துள்ளது. இது மல்டிபேக்கர் பங்கு மட்டுமல்ல, மல்டிபேக்கர் ஐ.பி.ஓ.களில் ஒன்றாகும். பங்குச் சந்தையில் இப்பங்கு பட்டியலிடப்பட்ட அன்று ஒருவர் இப்பங்கில் (பங்கின் விலை ரூ.92) ரூ.1,00,000 முதலீடு செய்து இருந்தால் இன்று அது சுமார் ரூ.2.76 லட்சமாக உயர்ந்திருக்கும்.


Click it and Unblock the Notifications