பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நல்ல பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்தாலே போதும் 2 வழிகளில் வருமானம் ஈட்டலாம்.
மூலதன உயர்வு மற்றும் டிவிடெண்ட் ஆகிய 2 வழிகளில் வருமானம் கிடைக்கலாம். உதாரணமாக டி.சி.எஸ்., இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குகின்றன.

மூலதனம் உயர்வில் இருந்து வருவாய் : பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் மூலதன உயர்வின் வாயிலாக சம்பாதிக்கலாம். நீங்கள் முதலீடு செய்த பங்கின் விலை உயரும் போது அந்த லாபத்தில் சம்பாதிக்கலாம். பங்குகளின் ஆதாயம் அல்லது லாபம் 100 சதவீதம் அல்லது அதற்கு மேல் செல்லலாம்.
இருப்பினும் மூலதனம் உயரும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. சில சமயம் சந்தையில் வாங்கிய விலையை காட்டிலும் பங்கு விலை குறைவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
பங்கு விலையை பாதிக்கும் காரணிகள்: ஒரு நிறுவனம் வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படும்போது, அதிகமான மக்கள் பங்குகளை வைத்திருக்க விரும்புவார்கள். இது சந்தையில் பங்குகளுக்கான அதிக தேவைக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக பங்கின் விலை அதிகரிக்கிறது.
இதுதவிர கையகப்படுத்துதல் திட்டங்கள், பங்குகளை திரும்ப வாங்குவது, போனஸ் அறிவிப்பு மற்றும் பங்குகளை பிரித்தல் போன்றவை குறுகிய காலத்தில் பங்குகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொருளாதாரம் நன்றாக இருந்தால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். இதன் விளைவாக நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். அதேசமயம் அதிக பணவீக்கம் அதாவது விலை அதிகமாக இருந்தால் நுகர்வோர் குறைவான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவார்கள் இது நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தை பாதிக்கும். எனவே நாட்டின உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், வட்டி விகிதம் மற்றும செயல் திறன் போன்றவையும் பங்கு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
டிவிடெண்ட் வாயிலான வருமானம் : ஒரு நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பகுதி அல்லது முழு டிவிடெண்ட் அறிவிப்பதன் மூலம் லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தில் ஒரு பகுதியை டிவிடெண்டாக வழங்கும் எஞ்சிய தொகையை நிறுவன விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவார்கள். டிவிடெண்ட் ஒவ்வொரு பங்குக்கும் அளிக்கப்படும்.
ஒரு நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.10 டிவிடெண்டாக கொடுக்க முடிவு செய்தால், அந்த பங்கின் முகமதிப்பு ரூ.10 எனில் அது 100 சதவீத ஈவுத்தொகை எனப்படும். லாபம் சம்பாதிக்கும் எல்லா நிறுவனங்களும் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கொடுக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை
டிவிடெண்ட் ஆதாயத்தை கணக்கிடுவது மிகவும் எளிது. ஒரு பங்கு டிவிடெண்ட் தொகையை தற்போதைய பங்கின் சந்தை விலையால் வகுத்து அதனை 100ஆல் பெருக்கினால் டிவிடெண்ட் ஆதாயத்தை தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.4 டிவிடெண்ட் அறிவித்துள்ளது, அந்த பங்கின் தற்போதைய விலை ரூ.120ஆக இருந்தால், டிவிடெண்ட் ஆதாயம் 3.33 சதவீதம் என்று சொல்லலாம்.
ஒருவர் பங்குகளில் முதலீடு செய்யும்போது, ஹெட்ஜிங் செயல்முறையை (பங்கு விலை குறைய குறைய வாங்குவது) பயன்படுத்தாவிட்டால், மூலதனத்தின் பெரும் பகுதியை இழக்கும் அபாயம் உள்ளது.


Click it and Unblock the Notifications