மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தொகுதிகளில் முன்னிலை மற்றும் பின்னடைவு நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இது இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் கிட்டத்தட்ட 15 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளன.
நரேந்திர மோடியின் ஆட்சியில் பாதுகாப்பு துறை பங்குகள் அனைத்து தரப்பு முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிகப்படியான கவனத்தை ஈர்த்து வந்த நிலையில், தேர்தல் முடிவுகளின் எதிரொலியால் ஒரே நாளில 15 சதவீதம் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

நேற்றைய தினம் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் வரலாற்று உச்சத்தை தொட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்ததால் பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டின.
இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு நிலவரம் வெளியாகி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் தற்போது சரிவை கண்டு வருகின்றன.
குறிப்பாக கடந்த சில வாரங்களாக கிடைத்த லாபங்களையாவது மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்து வருவது தெரியவந்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டிலேயே பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட உபகரணங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டியது. இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாகவே பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைக் கண்டு வந்தன.
குறிப்பாக கடந்த சில வாரங்களில் இந்த நிறுவனங்களின் பங்குகள் தங்களது இதுவரை இல்லாத அளவு உச்சத்தை எட்டின. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாரத் டைனமிக்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், மசாகாவோன் டாக் ஷிப் பில்டர்ஸ், கொச்சின் ஷிப்யார்டு ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவை கண்டுள்ளது.
காலை 11 மணியளவில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 15 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்தது. அதேபோல பாரத் டைனமிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், மசாகாவோன் டாக் ஷிப் பில்டர்ஸ் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் 10 முதல் 12 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளன.
நேற்றைய தினம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் பங்குகள் இன்று 10 சதவீதம் வரை குறைந்துள்ளன.
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட பங்குகள் அதிக அளவில் உயர கூடும் என தரகு நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டு இருந்தன. இந்த நிலையில் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக இந்த நிறுவனத்தின் பங்குகள் தற்போது குறைந்து வருகின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications