அம்பேத்கர் ஜெயந்தி (ஏப்ரல் 14) மற்றும் புனித வெள்ளி (ஏப்ரல் 18) ஆகியவற்றை முன்னிட்டு 2 தினங்கள் விடுமுறை விடப்பட்டதால், கடந்த வாரம் 3 தினங்கள் மட்டுமே பங்குச் சந்தைகள் இயங்கின. 3 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்ற போதிலும் கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,509 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்ஃடி 414 புள்ளிகளும் உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம் அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குகளில் முதலீடு செய்ய தொடங்கியிருப்பதுதான்.
அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.8,472 கோடி நிகர முதலீடு செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.2,352 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தனர். இருப்பினும் அதற்கு அடுத்த 2 தினங்களில் மொத்தம் ரூ.10,824 கோடியை இந்திய பங்குகளில் முதலீடு செய்தனர். அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குகளில் முதலீடு செய்ய தொடங்கியிருப்பது பங்குச் சந்தைகளின் வளர்ச்சிக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது.

இந்திய பங்குச் சந்தைகள் பக்கம் அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் திரும்பி உள்ளதன் பின்னணயில் இரண்டு காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். முதலாவது, அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் 100ஆக சரிந்தது மற்றும் அது மேலும் சரிவடையும் என்ற எதிர்பார்ப்புகள் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது.
இரண்டாவது, அமெரிக்காவும், சீனாவும் இந்த ஆண்டு மந்தமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்தியாவின் பொருளாதாரம 2025-26ம் நிதியாண்டில் 6 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சவாலான சர்வதேச சூழலுக்கு மத்தியிலும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை வழங்குகிறது. இந்த 2 காரணங்களால்தான் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் பணத்தை கொட்ட தொடங்கியுள்ளனர்.
ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு அதிகாரி மூலோபாய நிபுணர் விகே விஜயகுமார் கூறுகையில், நிதி சேவைகள், சிமெண்ட், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டோ பங்குகள் மற்றும் சுகாதார பராமரிப்பு போன்ற உள்நாட்டு நுகர்வு சார்ந்த துறைகளில் தான் அன்னிய முதலீட்டாளர்கள் உள்பட சந்தை முதலீட்டாளர்களின் கவனம் இருக்கும் என்று தெரிவித்தார். அதாவது இந்த குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவர்.
தற்போது அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குகளில் முதலீடு செய்ய தொடங்கியிருப்பது நேர்மறையாக இருந்தபோதிலும், இந்த மாதத்தில் இதுவரை இந்திய பங்குளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் ரூ.23,103 கோடியை திரும்ப எடுத்துள்ளது. கடந்த ஜனவரி முதல் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
திங்கட்கிழமை பங்குச் சந்தையில் காளையின் ஆட்டம் தொடருமா..? நிபுணர்கள் சொல்வது என்ன..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications