இந்தியாவின் 2 முக்கியப் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் ஒரே நாளில் சுமார் 7 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளனர். இந்த மாபெரும் சரிவுக்குக் காரணமாக இருந்தது ஏப்ரல் 12ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி தான்.
ஏப்ரல் 12ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் அளவில் சரிந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியும், அதானி குழுமத்தின் கௌதம் அதானியும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று
இந்தியாவில் 2வது கொரோனா அலை மிகவும் வேகமாகப் பரவி வரும் காரணத்தால், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகமாக இருக்கும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றினர்.
கொரோனா தொற்று
புதிய கொரோனா தொற்றுப் பரவி வரும் காரணத்தால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் இதைக் கட்டுப்படுத்த அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்செக்ஸ் 1700 புள்ளிகள் சரிவு
புதிய கொரோனா தொற்று, லாக்டவுன் அறிவிப்பு, வர்த்தகப் பாதிப்பு, முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 12ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1700 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி
இந்த மோசமான வர்த்தக நாளில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சுமார் 2.7 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார். ஏப்ரல் 12ஆம் தேதி வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 3.35 சதவீதம் வரையில் சரிவு அடைந்துள்ளது.
கௌதம் அதானி வீழ்ச்சி
இதேபோல் கௌதம் அதானியின் ஏப்ரல் 12ஆம் தேதி மட்டும் 4.2 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்தார். இந்நாளில் அதானி டிரான்ஸ்மிஷன் 5 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 8.94 சதவீதமும், அதானி க்ரீன் 5 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 9.36 சதவீதம், அதானி பவர் 4.97 சதவீதம், அதானி எண்டர்பிரைசர்ஸ் 11.1 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கௌதம் அதானி தடாலடி வளர்ச்சி
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கப் போட்டி போட்டு வரும் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் ஆகியோரை விடவும் நம்ம நாட்டுக் கௌதம் அதானி அதிகப் பணத்தை இந்த ஆண்டுச் சம்பாதித்து உள்ளார். 2021 நிதியாண்டில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஓரே வருடத்தில் 16.2 பில்லியன் டாலர் அதிகரித்து 50 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
2021 நிதியாண்டில் மட்டும் கௌதம் அதானியின் நிறுவனப் பங்குகளின் மதிப்புக் குறைந்தபட்சம் 50 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக அதானி டோட்டல் 96%, அதானி எண்டர்பிரைசர்ஸ் 90%, அதானி டிரான்ஸ்மிஷன் 79%, அதானி பவர் - அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டும் 52 % அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் கடந்த வருடம் 500 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் 12 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications