மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதன் காரணமாக சென்னை மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இத்தகைய சூழலில் தங்கம் விற்பனை செய்யும் நிறுவனங்களின் பங்குகள் மிகக் கடுமையாக சரிவை சந்தித்து இருக்கின்றன.
மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும், கையிருப்பில் இருக்கக்கூடிய அந்நிய செலாவணியை கச்சா எண்ணெய் வாங்குவதற்கு சேமிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்திருக்கிறது. நேற்று வரை தங்கம் , வெள்ளிக்கான இறக்குமதி வரி 6 சதவீதமாக தான் இருந்தது. இன்றிலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டிருப்பதால் தங்கம் , வெள்ளியின் விலைகள் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன.

சென்னையிலேயே இன்றைய தினம் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 15,400 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 8,560 ரூபாய் உயர்ந்து 1,23,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் வெள்ளி 30 ரூபாய் விலை உயர்ந்து 330 ரூபாய்க்கு விற்பனையாகிறது . ஒரு கிலோ வெள்ளி 30 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவையிலும் ஒரு கிராம் தங்கம் 15,400 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 8,560 ரூபாய் உயர்ந்து 1,23,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் இதே நிலவரம் தான்.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வால் மக்களிடையே தங்கம் வாங்கும் போக்கு குறையும். இதனால் நகை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களின் லாபம் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் நகை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பங்குகளை பெருமளவில் விற்பனை செய்தனர். இதனால் கல்யாண் ஜுவல்லர்ஸ், டைட்டன் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் இன்றைய தினம் பங்குச்சந்தையில் பெரிய அளவில் சரிவை சந்தித்தன.

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவன பங்கு மதிப்பு சரிவிலேயே வர்த்தகத்தை தொடங்கியது. கிட்டத்தட்ட ஆறு சதவீதம் வரை சரிவடைந்து ஒரு பங்கின் விலை 340 ரூபாய் என வர்த்தகம் ஆகி வருகிறது. அடுத்ததாக டாடா குழுமத்திற்கு சொந்தமான டைட்டன் கம்பெனி நிறுவனத்தின் பங்கு மதிப்பும் இன்றைய தினம் 1 சதவீதம் வரை சரிந்து 4,399 ரூபாயாக வர்த்தகமானது.
தங்கமயில் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் ஐந்து சதவீதம் சரிவடைந்து 348 ரூபாய் என வர்த்தகமாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு காரணமாக தங்கம் வாங்குவது குறையும், இதனால் இந்த நிறுவனங்களின் அடுத்தடுத்து வரக்கூடிய காலாண்டு லாபங்கள் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக இந்த பங்குகளை விற்பனை செய்ததே இதற்கு முக்கிய காரணம்.இதற்கிடையே ஒரே நாளில் தங்கம், வெள்ளி விலைகள் பெரிய அளவில் உயர்ந்திருக்கும் சூழலில் இனி வரும் நாட்களில் மேலும் விலை உயரவே வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

