இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு சென்செக்ஸ் 70,000 புள்ளிகளை கடந்தது, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 21,000 புள்ளிகளை தாண்டியது. கடந்த சில வர்த்தக தினங்களில் பல நிறுவன பங்குகளின் விலை மளமளவென உயர்ந்து வருகிறது.
குறிப்பாக ஒரு பென்னி பங்கின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அது ஒரு அரசு நிறுவன பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தினம் முதல் அந்த நிறுவன பங்கு கடும் ஏற்றம் கண்டு வருகிறது.

இவ்வளவு பில்டப் கொடுத்த பங்கின் பெயர் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA-இரிடா). மத்திய அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் 1987ல் தொடங்கப்பட்டது, இந்நிறுவனம் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்படுகிறது. இரிடா நிறுவனம் சோலார், காற்றாலை, நீர் மற்றும் பயோ ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு புதுப்பிக்கத்தக்க ஆதார திட்டங்களை ஊக்குவிக்கிறது மற்றும் நிதியுதவி அளிக்கிறது.
இரிடா நிறுவனத்தின் நிதி நிலை மிகச்சிறப்பாக உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.416.85 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 14.08 சதவீதம் அதிகமாகும்.
கடந்த மாதம் இரிடா ஐ.பி.ஓ.வில் களம் இறங்கி நிதி திரட்டியது, கடந்த மாதம் 29ம் தேதி அந்நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அன்றைய தினம் பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.49.99ஆக உயர்ந்தது. இது ஐ.பி.ஓ. வெளியீட்டு விலையை காட்டிலும் 56.22 சதவீதம் அதிகமாகும்.இன்று முதல் இப்பங்கின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.
நேற்று பங்குச் சந்தையில் இரிடா பங்கின் விலை ரூ.14.17 அல்லது 20 சதவீதம் உயர்ந்து ரூ.85.02ல் முடிவுற்றது. இதனையடுத்து ஒரே நாளில் இந்திய அரசின் போர்ட்போலியோ ரூ.2,856 கோடிக்கு மேல் உயர்ந்தது. இந்நிறுவனத்தில் 2,01,58,23,529 பங்குகள் அல்லது 75 சதவீத பங்கினை இந்திய அரசு வைத்துள்ளார்.
இரிடா ஐ.பி.ஓ.வில் பங்குகளை வாங்கி அவற்றை விற்காமல் தொடர்ந்து வைத்திருக்கும் எந்தவொரு முதலீட்டாளரும் இதுவரையிலான காலத்தில் 165.7 சதவீத மல்டிபேக்கர் ஆதாயத்தை பெற்று இருப்பார்கள். சுமார் 10 வர்த்தக தினங்களில் இந்த பங்கு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பங்கின் விலை இன்னும் ஏறிக்கொண்டே செல்கிறது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை அப்பர்சர்க்கியூட் அடித்து (20 சதவீதம்) இதுவரை இல்லாத புதிய உச்சமாக ரூ.102.02ஐ எட்டியது.


Click it and Unblock the Notifications