குரோயிங்டன் வென்ச்சர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் மசாலா பொருட்களை வர்த்தகம் செய்து விநியோகம் செய்யும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் கிவி, டிராகன் பழம், அவகேடோ மற்றும் பல விளைபொருட்களை இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.19.63 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2021-22ம் நிதியாண்டைக் காட்டிலும் 1,496 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 2022-23ம் நிதியாண்டில் குரோயிங்டன் வென்ச்சர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக ரூ.1.26 கோடி ஈட்டியுள்ளது. இருப்பினும் முந்தைய 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.
இந்நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களை ஏமாற்றவில்லை. கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 7.43 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேவேளையில் கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 247 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 1,901 சதவீதம் அதிகரித்துள்ளது. 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 536 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது தவிர, இப்பங்கின் ஈக்விட்டி மீதான வருவாய் 10.8 சதவீதமாகவும், மூலதனத்தின் மீதான வருமானம் 16.1 சதவீதமாக உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குரோயிங்டன் வென்ச்சர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் அண்மையில் தனது பங்குகளை பிரிக்க 1:10 என்ற விகிதத்தில் பிரிக்க உள்ளதாக தெரிவித்து இருந்தது. அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட 1 ஈக்விட்டி பங்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட 10 ஈக்விட்டி பங்குகளாக பிரிக்கப்படும்.
இதனால் இந்த பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு பங்குகள் எண்ணிக்கை மட்டுமே அதிகரிக்குமே தவிர அந்த பங்குகளின் மொத்த மதிப்பு அப்படியே இருக்கும். தற்போது, இந்நிறுவனம், வரவிருக்கும் பங்குப் பிரிப்புக்கான பங்குதாரர்களின் தகுதியை நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக வரும் 31ம் தேதியை பதிவு தேதியாக நிர்ணயித்துள்ளது.
இந்த செய்தி வெளியானதையடுத்து கடந்த சில வர்த்தக தினங்களாக இந்நிறுவன பங்கின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 8 சதவீதம் வரை உயர்ந்தது.
மேலும் கடந்த சனிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.184.05 வரை சென்றது. இருப்பினும் முடிவில் முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.22 சதவீதம் உயர்ந்து ரூ.179.55ல் முடிவுற்றது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.288.92 கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications