நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகளுக்கு, புனித வெள்ளி என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்திய கமாடிட்டி சந்தையும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 520.68 புள்ளிகள் அதிகரித்து, 50,029.83 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 176.70 புள்ளிகள் அதிகரித்து 14,867.40 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் நிஃப்டி ஏற்றத்தில் முடிவடைந்து காணப்பட்டாலும், வரும் வாரத்தில் மீண்டும் சரியலாம், யுடேர்ன் எடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் 14500 என்ற லெவலை உடைத்தால் மீண்டும், 14,200 - 14250 என்ற புள்ளிகளை தொடலாம் என கணித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் பல காரணிகள் சந்தைகளுக்கு சாதகமாக உள்ள நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் இந்தியாவினை பொறுத்தவரையில் ஒரு புறம் தடுப்பூசி என்பது போட ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இரண்டாம் கட்ட பரவலானது வேகமெடுத்து வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் மீண்டும் பொருளாதாரம் என்ன வாகுமோ? என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் வந்துள்ளது.
தற்போது தான் கொரோனாவில் இருந்து பொருளாதாரம் மீண்டு வர ஆரம்பித்து இருந்தாலும், இன்னும் முழுமையாக வளர்ச்சி நிலையை எட்டவில்லை. அதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும் என சில தினங்களுக்கு முன்பு உலக வங்கி ஒரு அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு கடைசி காலாண்டு முடிவடைந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் கடைசி காலாண்டு அறிக்கையினையும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். ஆக இதுவும் வரும் வாரங்களில் சந்தையில் பெரியளவிலான ஏற்ற இறக்கத்தினை காட்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு முதலீட்டாளர்கள் தொடர்ந்து சர்வதேச சந்தையினை கண்காணித்து வருகின்றனர். அமெரிக்க பத்திர சந்தை வலுவான ஏற்றத்தில் காணப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து டாலரின் மதிப்பும் வலுவாகவே காணப்படுகிறது. இதுவும் சந்தையில் வரும் வாரத்தில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.