2024 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இந்த ஆண்டின் முக்கியமான நிகழ்வுகளை புரட்டிப்பார்ப்பது போல், இந்த ஆண்டின் முதலீட்டு சந்தையையும் திரும்பி பார்க்க கூடிய தருணம் இது. இந்த ஆண்டு துவக்கத்திற்கும் முடிவிற்கும் முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது, உதாரணமாக தங்கம் தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் தற்போது மந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இப்படி ஒவ்வொரு முதலீட்டு பிரிவும் பல மாற்றங்களை எதிர்கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தை இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்கியுள்ளது மூலம் இந்த வருடம் அதிகம் லாபம் கொடுத்த முதலீட்டு பிரிவாக பங்குச்சந்தை விளங்குகிறது. இதை எப்படி கணக்கிடுவது..?

2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ. 1 லட்சத்தை நிஃப்டி 500 இன்டெக்ஸில் முதலீடு செய்ததாக வைத்துக்கொள்ளுங்கள், டிசம்பர் 13, 2024 ஆம் தேதிக்குள் அதன் மதிப்பு ரூ. 1,21,300 ஆக அதிகரித்திருக்கும். இது நிஃப்டி 500 குறியீட்டின் வளர்ச்சியை பொறுத்து கணக்கிடப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு குறியீடு, பங்குகள் அடிப்படையில் இதன் அளவு மாறுப்படும்.
பங்குச்சந்தையின் சிறப்பான செயல்திறனுக்கு அடுத்தபடியாக, தங்கம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், டிசம்பர் 13, 2024 ஆம் தேதிக்குள் அதன் மதிப்பு ரூ. 1,20,700 ஆக அதிகரித்திருக்கும்.
இதேபோல் கடன் சந்தை, குறிப்பாக Crisil Composite Bond Index, மிதமான லாபத்தை வழங்கியுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் ரூ. 1 லட்சத்தை கடன் சந்தையில் முதலீடு செய்திருந்தால், டிசம்பர் 13, 2024 ஆம் தேதிக்குள் அதன் மதிப்பு ரூ. 1,08,800 ஆக அதிகரித்திருக்கும்.
கடைசியாக ரியல் எஸ்டேட் சந்தை, கடந்த சில ஆண்டுகளாக மிதமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் ரூ. 1 லட்சத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தால், டிசம்பர் 13, 2024 ஆம் தேதிக்குள் அதன் மதிப்பு ரூ. 1,02,700 ஆக அதிகரித்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 10 பெரிய இந்திய நகரங்களில் ரியல் எஸ்டேட் விலைகளை கண்காணித்து காலாண்டு வாரியான வீட்டு விலை குறியீட்டை (HPI) வெளியிடுகிறது. இதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உள்ளது.
பங்குச்சந்தையின் நீண்ட கால சிறப்பான செயல்திறனை கருத்தில் கொண்டாலும், நிதி ஆலோசகர்கள் அனைத்து சேமிப்புகளையும் பங்குச்சந்தையில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். கடன், தங்கம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டு அபாயத்தை குறைத்து அதிகபட்ச லாபத்தை பெறலாம்.


Click it and Unblock the Notifications