மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவனத்தின் (ஐ.ஆர்.இ.டி.ஏ.) ஐபிஓ நவம்பர் 21ம் தொடங்குகிறது. 1987ல் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.இ.டி.ஏ. ஒரு மத்திய அரசு நிறுவனமாகும். மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனம் ஒரு மினிரத்னா அந்தஸ்து நிறுவனமாகும். ஒரு வங்கியில்லாத நிதி சேவை நிறுவனமாகும். இந்நிறுவனம் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை தீவிரமாக ஊக்குவிப்பது, அபிவிருத்தி செய்தல் மற்றும் நிதி உதவி (கடன் வழங்கல்) ஆகியவற்றை செய்கிறது.

ஐ.ஆர்.இ.டி.ஏ. நிறுவனத்தின் ஐ.பி.ஓ. நவம்பர் 21ம் தேதி தொடங்கி 23ம் தேதி நிறைவடைகிறது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு நவம்பர் 20ம் தேதி நடைபெறும். இந்நிறுவனம் ஐ.பி.ஓ. வாயிலாக ரூ.2,150.21 கோடி திரட்டும் என எதிர்பார்க்கிறது.
புதிய பங்கு வெளியீட்டுக்கான அடிப்படை விலை ரூ.30-32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ.வில் குறைந்தபட்சம் 460 பங்குகள் அதன் பிறகு 460 பங்குகளின் மடங்குகளில் பங்குகளை கோரலாம்.

இந்த ஐ.பி.ஓ.வில் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மூலம் மத்திய அரசு 26.87 கோடி பங்குகளை விற்பனை செய்து ரூ.860.08 கோடியை திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.ஓ. வாயிலாக கிடைக்கும் வருமானத்தை, எதிர்கால மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்யவும், கடன் வழங்குவதற்கும், மூலதன தளத்தை அதிகரிக்கவும் ஐ.ஆர்.இ.டி.ஏ. நிறுவனம் பயன்படுத்தும். மேலும், பங்குச்சந்தைகளில் பங்குகளை பட்டியலிடுவதன் நன்மைகளையும் பெறலாம் என இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இந்நிறுவனத்தின் நிதி நிலவரமும் நன்றாக உள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஐ.ஆர்.இ.டி.ஏ. வருவாயாக ரூ.3,483.04 கோடியும், லாபமாக ரூ.864.63 கோடியும் ஈட்டியிருந்தது. 2023 செப்டம்பர் 30ல் முடிவடைந்த காலத்தில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.2,320.46 கோடியும், லாபமாக ரூ.579.32 கோடியும் ஈட்டியுள்ளது. கடந்த 2021-22ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.23,921 கோடி கடன் அனுமதியையும், சுமார் ரூ.16,071 கோடி கடனும் வழங்கியது.


Click it and Unblock the Notifications