இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (திங்கள் கிழமை) வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் புதிய உச்சத்தைத் தொட்ட அதே நாளில், மும்பை பங்குச்சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பீடு முதன் முறையாக ரூ.400 லட்சம் கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 370.09 புள்ளிகள் உயர்ந்து 74,613.28 புள்ளிகளைத் தொட்டு உள்ளது, அமெரிக்க சந்தையில் வேலைவாய்ப்பு தரவுகள் வெளியான பின்பு ஏற்பட்ட சாதகமான பங்குச்சந்தை சூழ்நிலை ஆசிய சந்தை முழுவதும் எதிரொலித்துள்ளது.

இதன் வாயிலாகக் கடந்த வாரம் மந்தமான வர்த்தகத்திலிருந்த இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகம் இந்த வாரம் உயர்வுடன் துவங்கியுள்ளது. சென்செக்ஸ் 74673.84 என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது போல் நிஃப்டியும் 22,634.30 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது.
இந்திய சந்தை முதல் வெளிநாட்டுச் சந்தையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் வாயிலாக முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டைப் பங்குச்சந்தைக்குத் திருப்பினர். சில்லறை முதலீட்டாளர்களின் அதிகப்படியான பங்கீடு உடன் கடந்த 9 மாதங்களில் செய்த பங்குச்சந்தை முதலீடுகள் மும்பை பங்குச்சந்தையில் சந்தை மதிப்பீடு ரூ.100 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, நிஃப்டி குறியீடு 19,400 என்ற நிலையில் இருந்தபோது, மொத்த சந்தை மதிப்பீடு ரூ.300 லட்சம் கோடியை எட்டியது. அப்போதிருந்து, நிஃப்டி குறியீடு 16 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, புதிய உச்சமாக 22,623.90 என்ற புள்ளியைத் தொட்டுள்ளது.
இந்த உயர்வு குறிப்பாகச் சிறு மற்றும் இடைநிலை நிறுவனப் பங்குகளில் மிகவும் கூர்மையாக இருந்துள்ளது, அவற்றில் நூற்றுக்கணக்கான பங்குகள் பல மடங்கு லாபம் (Multibagger Returns) வழங்கியுள்ளன.
கடந்த 9 மாதங்களில் ரூ.100 லட்சம் கோடி உயர்வு, பொதுப் பங்கு வெளியீடு (IPO), தொடர்ச்சியான பங்கு வெளியீடு (FPO) அல்லது பிற பங்கு நிதி திரட்டுதல் போன்ற பல்வேறு புதிய பட்டியலிடல்களின் தாக்கத்தையும் உள்ளடக்கியது என்றாலும், இந்த உயர்வு பெரும்பாலும் டாப் 500 நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தையின் மதிப்பீடு 2007ஆம் ஆண்டில் ரூ.50 லட்சம் கோடியைக் கடந்தது, 2014ஆம் ஆண்டில் ரூ.100 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டியது, மேலும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.200 லட்சம் கோடி என்ற அளவைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
செல்வத்தை உருவாக்குதல் என்ற அடிப்படையில், இந்த தொடர்ச்சியான உயர்வு (Bull Run) இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் எப்போதும் இல்லாத அதிகப்படியான லாபத்தை முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது.
பங்குச்சந்தையில் முதலீடு செய்வது அதிக லாபம் தரக்கூடியது என்றாலும், அதிக ரிஸ்க் (Risk) கொண்டதாகவும் இருக்கும். எனவே, முதலீடு செய்வதற்கு முன் நிபுணர் ஆலோசனை பெறுவது அவசியம். இந்த அபரிமிதமான உயர்வு நீடிக்குமா என்பது கணிப்பது கடினம். பங்குச்சந்தை சுழற்சித்தன்மை கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications