நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று இண்டஸ்இந்த் வங்கி. இந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருபவர் சுமந்த் கத்பாலியா. கடந்த 5 ஆண்டுகளாக சுமந்த் கத்பாலியா தலைமையில் இண்டஸ்இந்த் வங்கி சிறப்பான வளர்ச்சியை கண்டு வந்தது. குறிப்பாக இண்டஸ்இந்த் பங்குகளின் வலுவான மீட்சி ஏற்பட்டது. சமீபத்திய சரிவுகளுக்கு முன்பு, இந்நிறுவன பங்கின் விலை ரூ.398லிருந்து ரூ.936ஆக இரு மடங்குக்கு மேல் உயர்ந்தது. இண்டஸ்இந்த் வங்கியின் இயக்குனர்கள் குழு, சுமந்த் கத்பாலியாவின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீடிக்க அனுமதி வேண்டி இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் செய்தது.
ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கியின் இயக்குனர்கள் குழு பரிந்துரைத்த 3 ஆண்டு காலத்துக்கு பதிலாக ஒரு வருட நீடிப்புக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியது. இரண்டாவது முறையாக, சுமந்த் கத்பாலியாவின் பதவி நீட்டிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான பதவி காலத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, இண்டஸ்இந்த் வங்கி தொடர்பான மூலோபாய தன்மை மற்றும் சாத்தியமான மேலாண்மை மாற்றம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இது இது இண்டஸ்இந்த் வங்கி முதலீட்டாளர்களின் உணர்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலையில் எதிரொலித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை 5 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டு ரூ.886.40ஆக குறைந்தது. ஏற்கனவே இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை சமீபகாலமாக தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இப்பங்கின் விலை 42.5 சதவீதம் சரிவு கண்டது. கடந்த 3 மாதங்களில் இப்பங்கின் விலை 8.41 சதவீதம் குறைந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 9.11 சதவீதம் குறைத்துள்ளது.
தரகு நிறுவனமான எம்கே குளோபல், இண்டஸ்இந்த் வங்கியின் இலக்கு விலையை ரூ.1,125ஆக குறைத்தது. இது எம்கே குளோபல் முதலில் மதிப்பீடு செய்து இருந்த இலக்கு விலையை (ரூ.1,400) காட்டிலும் 20 சதவீதம் குறைவாகும். இது ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை, இண்டஸ்இந்த் வங்கியின் நிர்வாக மாற்றத்திற்கும், மூலோபாய நிச்சயமற்ற தன்மைக்கும் வழிவகுக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதேசமயம் தரகு நிறுவனம், இண்டஸ்இந்த் வங்கி குறித்த வாங்கலாம் என்ற மதிப்பீட்டை தொடர்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறைவடைந்தபோது இப்பங்கின் விலை ரூ.936.80ஆக இருந்தது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications