அமெரிக்கப் பணவீக்க தரவுகள் அமெரிக்கப் பங்குச்சந்தைக்குச் சாதகமாக அமைந்த காரணத்தாலும், ஆசிய சந்தை சிறப்பான வளர்ச்சி அடைந்த காரணத்தாலும் மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே 250 புள்ளிகள் உயர்வில் துவங்கியது.
இந்த வாரம் மும்பை பங்குச்சந்தை பல ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் முதலீட்டாளர்கள் ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். இந்த வேளையில் இந்திய சந்தையின் முதலீட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தை சாதகமாக அமைந்த காரணத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் வரலாற்று உச்சத்தைத் தொட்டது.
இந்த அதிரடியில் இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டு மதிப்பு 231.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம்
இன்று வாரத்தின் கடைசி நாள் என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் வழக்கம்போல் சற்று கூடுதலான ஆர்வம் இருந்தது. அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையின் லாபகரமான நிலையின் மூலம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
வர்த்தகம் துவங்கும் போதே உயர்வுடன் இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் தான். ஏன் தெரியும்..?
அமெரிக்காவின் பணவீக்க தரவுகள்
வியாழக்கிழமை வெளியான அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் பயமுறுத்தும் வகையில் இல்லை என்றும், சில வர்த்தகப் பொருட்கள், விமானப் பயணக் கட்டணம் ஆகியவற்றின் விலை மட்டுமே சற்று அதிகமாக உள்ளது.இது தற்காலிகமானது மற்றும் விரைவில் இருந்து இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடியது என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கப் பங்குச்சந்தை
இதன் வாயிலாக அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி, நாஸ்டாக் குறியீடுகள் நேற்றைய வர்த்தக முடிவில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் இன்று காலை ஆசியச் சந்தையிலும் பெரும்பாலான முக்கியச் சந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையும் வளர்ச்சி அடைந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 52,641.53 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 15,816.30 புள்ளிகளையும் அடைந்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்தது.
இதன் காரணமாக முதலீட்டாளர்களின் மொத்த சந்தை மதிப்பு இன்று காலை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உச்சத்தில் இருக்கும் போது மட்டும் 1.29 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்தது.
231.52 லட்சம் கோடி ரூபாய்
இதன் வாயிலாக நேற்றைய வர்த்தக முடிவில் 230.23 லட்சம் கோடி ரூபாய்க்கு முடிந்த முதலீட்டு மதிப்பு, இன்று 1.29 லட்சம் கோடி ரூபாய் உயர்வுடன் 231.52 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து புதிய சாதனை படைத்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 2021 வளர்ச்சி
2021ஆம் ஆண்டில் மட்டும் சென்செக்ஸ் 10.09 சதவீதம் அதாவது 4,816 புள்ளிகளும், நிஃப்டி 13.24 சதவீதம் அதாவது 1851 புள்ளிகளும் உயர்ந்துள்ளது. இதுவே கடந்த 1 வருட காலத்தைக் கணக்கிடும் போது 56 முதல் 57 சதவீதம் வரையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications