பங்குச்சந்தையில் அவ்வப்போது குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகள் ஏறுவதும் இறங்குவதும் சகஜம் தான். ஆனால் பெரும்பாலும் ஐடி பங்குகள் அத்தனை சீக்கிரம் அடி வாங்காது. அப்படி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றிருந்த ஐடி நிறுவனங்கள் படிப்படியாக அந்த அந்தஸ்தை இழந்து வருகின்றன.
தற்போதைய பங்கு சந்தை நிலவரப்படி, முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகளுக்கு தரகு நிறுவனங்கள் நெகடிவ் மதிப்பீடுகளை கொடுக்க தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், தங்கத்தை அடமானமாக பெற்று கடன் வழங்கும் கோல்டு லோன் Gold Finance நிதி நிறுவனங்களின் முதலீடு செய்யலாம் என தரகு நிறுவனங்கள் புதிய முதலீட்டு பரிந்துரைகளை வழங்கி வருவதால், சந்தையில் முதலீட்டாளர்களின் கவனம் ஐடி துறையிலிருந்து தங்க கடன் நிறுவனங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்திய ஐடி துறையின் தற்போதைய நிலை குறித்து கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் (Kotak Institutional Equities) உள்ளிட்ட முன்னணி தரகு நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கை விடுத்துள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால், இன்போசிஸ் , டிசிஎஸ் மற்றும் எல்டிஎம் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் மீதான மதிப்பீடுகளை தரகு நிறுவனங்கள் குறைத்துள்ளன.
ஐடி துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாரம்பரிய சேவைகளுக்கான வருவாய் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய ஏஐ திட்டங்கள் மூலம் லாபம் ஈட்ட நீண்ட காலம் ஆகும் என்பதால், ஐடி நிறுவனங்களின் குறுகிய கால வளர்ச்சி மந்தமாக இருக்கும் என கோடக் நிறுவனம் எச்சரித்துள்ளது.
நிஃப்டி ஐடி குறியீடு சரிவை சந்தித்துள்ளதும், உலகளாவிய மூலதன செலவுகள் குறைந்துள்ளதும் ஐடி பங்குகளின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை குறைத்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் டிசிஸ் பங்கு மதிப்பு 29% வரை சரிந்துள்ளது. இன்போசிஸ் பங்கு 31% வரை குறைந்துள்ளது.
அதே வேளையில் ஐடி பங்குகளுக்கு நேர்மாறாக, தங்க கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியுள்ளது. உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான ஜே.பி. மோர்கன் தங்க கடன் வழங்கும் நிதி நிறுவனங்களான IIFL பைனான்ஸ் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்கலாம் என பரிந்துரைக்கிறது.
ஜே.பி. மோர்கனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, IIFL மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் 8 சதவீதம் வரை உயர்ந்தன. இந்த மாதத்தில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தங்க நகை கடன் வழங்கும் முறைகள் எளிமையாக இருப்பது மற்றும் உடனடி நிதி தேவைக்கான பாதுகாப்பான வழி என்பதால் தங்க கடன் நிறுவனங்களின் வணிகம் வேகமாக வளர்ந்து வருகிறது என ஜே.பி. மோர்கன் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை உயர்வால் தங்க நகை அடகு வைத்தால் அதிக பணம் கிடைக்கும் என்பதால் மற்ற கடன்களை விடுத்து ஏராளமான மக்கள் தங்க நகைகளை அடகு வைப்பார்கள் என்பதால் இது வேகமாக வளரும் ஒரு வணிகமாக உள்ளது.
ஏஐ வருகையால் ஏற்படும் சவால்கள் மற்றும் மந்தமான வளர்ச்சியை கருதி, ஐடி துறை பங்குகளில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் தற்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என கூறும் தரகு நிறுவனங்கள், தங்க கடன் மற்றும் நிதி சேவைகளை வழங்கும் IIFL, மணப்புரம் போன்ற நிறுவனங்களை வாங்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் முதலீட்டு ஸ்டைல் மாறி வருகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
