மும்பை: இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 200% ஈவுத்தொகை வழங்க முன் வந்துள்ளது. ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் (Jindal Steel & Power -JSPL) தங்களது 2023-24 ஆம் நிதியாண்டிற்கான நான்காவது காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2023-24 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் நிகர வருவாய் 15,749 கோடி ரூபாயாக இருக்கிறது. அதேபோல நிறுவனத்தின் ஏற்றுமதியும் 11 சதவிகிதம் என்ற அளவில் நிலையான விகிதத்திலேயே இருக்கிறது.

வரி பிடித்தங்கள் போக நிறுவனத்தின் நிகர லாபம் 933 கோடி ரூபாயாக உள்ளது. ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் 2023- 24 ஆம் நிதியாண்டுக்கான மொத்த வருவாய் 58,115 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.
மூலப் பொருட்களின் விலை குறைந்தது, ஏற்றுமதி அதிகரித்தது ஆகிய காரணங்களால் நிறுவனம் நிலையான லாபத்தையும் வருவாயையும் மீட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் நிறுவனத்தின் கடன் டிசம்பர் 31ஆம் தேதி 9,115 கோடியாக இருந்தது ஆனால் அடுத்த காலாண்டில் அதாவது மார்ச் 31ஆம் தேதி 11,203 கோடி ரூபாய் என அதிகரித்துவிட்டது. இருப்பினும் நிறுவனத்தின் நிதிநிலைமை சீராக இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதே நிறுவனத்தின் கடன் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்று நிதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே ஜிண்டால் நிறுவனம் 2023 -24 ஆம் நிதியாண்டுக்கு 200 சதவிகிதம் ஈவுத்தொகை, அதாவது 1 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட ஈக்விட்டி பங்குகளுக்கு 2 ரூபாய் ஈவுத்தொகை வழங்குவது என முடிவு செய்துள்ளது.
விரைவில் ஆண்டு குழு கூட்டத்தில் இது தொடர்பான ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.இதனிடையே மே 14ஆம் தேதி பங்குச்சந்தையில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பானது 979 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. ஒரே நாளில் இதன் பங்கு மதிப்பு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் ஒரு பங்கின் மதிப்பு 70% உயர்வு கண்டு 979 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 96,777 கோடி ரூபாயாக உள்ளது. இதன் புக் வேல்யூ 406.86 என்ற அளவில் இருக்கிறது.
நிறுவனத்தின் பங்குகளை பொறுத்தவரை ப்ரமோட்டர்களே 61% பங்குகளை வைத்திருக்கின்றனர். சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 12 % பங்குகளும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் 11.93 % பங்குகளும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களிடம் 11.43 % பங்குகளும் இருக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications