மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தில் நிதித்துறை சார்ந்த சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் தான் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ். கடந்த ஆண்டு தனி நிறுவனமாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இருக்கிறது.
கடந்த 6 மாதங்களில் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 221 ரூபாயில் இருந்து தற்போது 383 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த பங்கு மதிப்பு 6 மாதங்களிலேயே 73.30% வளர்ச்சி அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சில வாரங்களாகவே இதன் மதிப்பு உச்சத்திலேயே இருக்கிறது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸின் பங்கின் மதிப்பு 25%, மார்ச் மாதத்தில் 14.11 % என உயர்ந்துள்ளது ஏப்ரல் மாதத்தில் இந்த 25 நாட்களுக்குள் 9 % என வளர்ச்சி அடைந்துள்ளது. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையே இந்த வளர்ச்சிக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. குறிப்பாக 2024ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் பாசிட்டிவாகவே இருந்தன என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் என்பது 2023ஆம் ஆண்டில் வெறும் 31 கோடி ரூபாயாக இருந்து 2024ஆம் ஆண்டில் 1,605 கோடி ரூபாய் என பல மடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி அண்மையில் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், புகழ்பெற்ற ப்ளாக் ராக் நிறுவனத்தோடு கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
அதாவது பிளாக் பிராக் நிறுவனத்துடன் 50:50 என்ற கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தரகு வேலைகள் மற்றும் சொத்து மேலாண்மை பணிகளிலும் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது.
இதற்கு முன்பு ரிலையன்ஸ் ஸ்ட்ராட்டஜிக் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் என்ற பெயரில் அறியப்பட்ட ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி பங்குச்சந்தையில் தனி நிறுவனமாக பட்டியலிடப்பட்டது.
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2,46,476 கோடி ரூபாயாக உள்ளது. இதன் புக் வேல்யூ 219.02, ஃபேஸ் வேல்யூ 10 ஆகவும் உள்ளது. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளை பொறுத்தவரை 47.12% ப்ரமோட்டர்களிடம், 20.83% சில்லறை முதலீட்டாளர்களிடமும் 19.45 % வெளிநாட்டு நிறுவனங்களிடமும் உள்ளது .
7.86 % பங்குகளை உள்நாட்டு நிறுவனங்களும், 4.74% பங்குகளை மியூச்சுவல் பண்டுகளும் வைத்துள்ளன. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பின் 52 வார கால சரிவு 202 ரூபாய் என்ற அளவிலும் 52 வார கால உயர்வு 394 ரூபாய் என்ற அளவிலும் இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications