இந்தியாவின் பிரபலமான நகைக்கடை பிராண்டான கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையை செயற்கையாக உயர்த்த மோதிலால் ஒஸ்வால் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் அசர்ட் மேனேஜர்கள் லஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது என்ற கருத்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வந்தது.
இந்த குற்றச்சாட்டுகளை மோதிலால் ஒஸ்வால் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கடுமையாக மறுத்துள்ளது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கு முக்கியமான விளக்கத்தையும் கொடுத்துள்ளது. இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பெரும் உயர்வைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மோதிலால் ஒஸ்வால் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை, தீங்கிழைக்கும் மற்றும் அவதூறு பரப்பும் முயற்சி என்று தெரிவித்துள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் பண்ட் மேனேஜர்கள் லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் வன்மையாக மறுத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தற்போது மோதிலால் ஒஸ்வால் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் இதற்கு விளக்கம் கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 6.93% வீழ்ச்சியடைந்து ரூ.501.65க்கு வர்த்தகம் நடைபெற்றது. ஜனவரி 2, 2025 அன்று ரூ.794.60 என்ற 52 வார உச்சத்தைத் தொட்ட நிலையில், பிப்ரவரி 1, 2024 அன்று ரூ.322.05 என்ற 52 வார சரிவை தொட்டது. இந்த சரிவின் மூலம் தற்போது, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.50,000 கோடி அளவில் உள்ளது.
இன்றைய வர்த்தக சூழ்நிலையைப் பார்க்கும்போது, 2 முக்கிய காரணங்களுக்காகத் தங்கம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பெரும் வர்த்தக்தை பெற வாய்ப்பு உள்ளது. இதேபோல் மோதிலால் ஒஸ்வால் நிறுவனமும் விளக்கம் கொடுத்து பிரச்சனை முற்றுப்புள்ளி வைத்துள்ளதால் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு விலை உயர வாய்ப்புள்ளது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 560% க்கும் அதிகமான லாபத்தைக் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்நிறுவனப் பங்கு 37% க்கும் அதிகமான லாபத்தைக் கொடுத்துள்ளது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில், இந்நிறுவனத்தின் பங்கு விலை 35% வீழ்ச்சியடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications