இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா-வின் பங்குகள் கடந்த 2 மாதங்களில் விறுவிறுவென ஏறதொடங்கியது. இந்த காலக்கட்டத்தில் இதன் பங்கு விலை 45 சதவீதம் அதிகரித்து ரூ.615லிருந்து ரூ.893ஆக உயர்ந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி பங்கு விலை முதல் முறையாக ரூ.900ஐ தொட்டது. இருப்பினும் வர்த்தகத்தின் இறுதியில் பங்கின் விலை ரூ.892.50ல் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே எல்ஐசி பங்கு விலை புதிய 52 வார உயர்வான ரூ.919.45ஐ தொட்டது. சுமார் 20 மாதங்களுக்கு பின்பு 900 ரூபாய் அளவீட்டை கடந்துள்ளது.

ஆனால் பின்னர் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்கு விலை மளமளவென சரிந்து முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.63 சதவீதம் குறைந்து ரூ.886.90ல் நிறைவடைந்தது.
இருப்பினும் பல மாதங்களாக மனவேதனையில் தவித்து வந்த முதலீட்டாளர்களுக்கு தற்போதைய விலை உயர்வு பெரிய நிம்மதி மற்றும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
எல்ஐசி பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.5.60 லட்சம் கோடியாக உள்ளது. இதனையடுத்து இந்தியாவில் அதிக மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் எல்ஐசி 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்பிஐ அடுத்து அதிக சந்தை மதிப்பு கொண்ட 2வது நிறுவனமாகவும் எல்ஐசி உயர்ந்துள்ளது.
தற்போது எல்ஐசி பங்கு பட்டியலிடப்பட்ட விலைக்கும் சிறிது அதிகமான விலையில் உள்ளது. இந்த விலை உயர்வு தொடரும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகள் வாயிலாக நல்ல லாபத்தை ஈட்டுவார்கள்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் ஐபிஓ 2022 மே 4ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற்றது. எதிர்பார்த்ததைக் காட்டிலும் எல்ஐசியின் ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்தது.
பெரிய நிறுவனம் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று முதலீட்டாளர்கள் போட்டி போட்டு பங்குகள் வேண்டி விண்ணப்பம் செய்தது மறக்க முடியாது.
முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கு விலை ரூ.949 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த மாதம் 17ம் தேதியன்று, நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 8 சதவீதம் விலை குறைத்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது, பல லட்சம் ரீடைல் முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தினர்.
நல்ல லாபம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் எல்ஐசி பங்குகளை வாங்கி வைத்த முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. எல்ஐசி பங்குகள் மீது பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய முதல் அதன் விலை தொடர்ந்து சரிவு கண்டது. ஒரு கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு எல்ஐசி பங்கு விலை ரூ.530ஆக சரிந்தது.
இதனால் இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மனமுடைந்து போயினர். இந்த சூழ்நிலையில் எல்ஐசி பங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக சரிவிலிருந்து மீள தொடங்கியது. இதன் வாயிலாக கடந்த 2 மாதங்களில் எல்ஐசி பங்கு விலை விறுவிறுவென ஏறதொடங்கியது. இந்த காலத்தில் பங்கு விலை 45 சதவீதம் அதிகரித்து ரூ.615லிருந்து ரூ.893ஆக உயர்ந்தது. ஜனவரி 17 ஆம் தேதி 919.45 ரூபாய் என்ற 52 வார உச்சத்தை தொட்டது.


Click it and Unblock the Notifications