மும்பை: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக ஜூன் 18ஆம் தேதி 3,013.50 ரூபாய் என்ற அளவை எட்டியது. தரகு நிறுவனங்கள் இந்நிறுவனத்திற்கு பாசிடிவ் தர மதிப்பீடு அளித்ததே இந்த உயர்வுக்கு காரணமாகும்.
ஜூன் 18ஆம் தேதி தேசிய பங்குச்சந்தையில் தொடக்கத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையானது 2,965 ரூபாய் என்ற நிலையிலிருந்து 3,013.50 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.

நோமுரா(Nomura) என்ற தரகு நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து ஏற்றதில் தான் இருக்கும் என்றும் இதற்கு BUY என்ற ரேட்டிங்கை கொடுத்ததுமே பங்கின் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது 15 % உயர்வு கண்டு அதாவது 3,374 ரூபாய் என்ற மதிப்பை எட்டும் என நோமுரா கணித்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியை விட இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயரும் என நோமுரா தெரிவித்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவு நல்ல வளர்ச்சி அடையக் கூடியதாக இருக்கிறது என சுட்டிக்காட்டும் நோமுரா, இந்த நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது எனக் கூறியுள்ளது.
கடந்த 14ஆம் தேதி பங்குச்சந்தையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சிறிது நேரம் டாடா மோட்டார்ஸை பின்னுக்கு தள்ளி சந்தை மூலதன அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக இருந்தது.
கடந்த வாரம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 2030ஆம் ஆண்டுக்குள் புதிதாக ஆறு எஸ்யூவி ரக காரர்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனத்தில் இருந்து புதிதாக 23 வாகனங்கள் வெளியிடப்பட உள்ளன என்றும் தெரிவித்தது.
அது மட்டும் இன்றி புதிதாக ஏழு மின்சார வாகனங்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிறுவன பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் 110 % லாபத்தையும் நடப்பாண்டில் அதாவது 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை 70% லாபத்தையும் தந்துள்ளது.
இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3.63 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ 5 , புக் வேல்யூ 532.80 ஆகும். 2023 ஆம் ஆண்டின் வருவாய் 1.22 லட்சம் கோடி ஆகும். இதில் லாபம் மட்டும் 11,374 கோடி. நிறுவன பங்குகளில் கிட்டத்தட்ட 41% வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசம் இருக்கிறது. புரமோட்டர்கள் 18 % பங்குகளை கொண்டுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications