அண்மையில் அதிக அளவில் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ.) களமிறங்கி வெற்றிகரமாக நிதி திரட்டியுள்ளன. இதில் பென்சில் மற்றும் பேனா தயாரிப்பு நிறுவனமான பிளேயர் ரைட்டிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ஒன்று. பிரபலமான பேனா பிராண்டான பிளேயர் பென்ஸ் இந்நிறுவனத்துக்கு சொந்தமானது தான்.
இந்தியாவில் பேனா மற்றும் பென்சில் சந்தை மதிப்பு ரூ.7,000 கோடியாகும். இந்த சந்தையில் சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிறுவனம் பிளேயர் பென்ஸ். நாட்டின் டாப் 3 பேனா தயாரிப்பாளர்களில ஒருவராக இந்நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் மிகப்பெரிய விற்பனை நெட்வொர்க்கை கொண்டுள்ளது. நாடு முழுவதுமாக 3,20,000 மேற்பட்ட விற்பனையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் பங்குகளை விற்பனை செய்து ரூ.600 கோடி திரட்ட திட்டமிட்டது. பிளேயர் பென்ஸ் ஐ.பி.ஓ. மேற்கொள்ளபோகிறது என்ற செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எழுவது குறைந்து விட்டது, கற்றல் மாடலும் மாறி விட்டது.
இதனால் பேனா மற்றும் காகித சந்தை மெல்ல மெல்ல அஸ்தமனம் அடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பேனா வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்காக நிதி திரட்ட போகிறேன் என்று பிளேயர் பென்ஸ் வந்தது பெரும் ஆச்சரியத்தை கிளப்பியது.
பேனா நிறுவனத்தில் யாராவது முதலீடு செய்வார்களா என்ற எண்ணம் நிலவியது. ஆனால் அதை எல்லாத்தையும் அடித்து நொறுக்கி விட்டது பிளேயர் பென்ஸ் ஐ.பி.ஓ.வின் அதிரி புதிரி வெற்றி.
இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ. கடந்த நவம்பர் 22ம் தேதி தொடங்கி 24ம் தேதி நிறைவடைந்தது. பங்கின் வெளியீட்டு விலை ரூ.288-304 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பங்குகள் வேண்டி வெளியீட்டு அளவை காட்டிலும் 47 மடங்கு அதிகமாக பங்குகள் கோரி முதலீட்டாளர்கள் விண்ணப்பம் செய்து இருந்தனர்.
இது நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று பேனாக்கள் கேட்பது போல் இருந்தது. கடந்த மாதம் 29ம் தேதியன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பிளேயர் பென்ஸ் பங்குகள் பட்டியலிடப்பட்டன. மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கு ரூ.503 என்ற விலையில் பட்டியலிடப்பட்டது. இது வெளியீட்டு விலையை காட்டிலும் சுமாார் 65 சதவீதம் அதிகமாகும்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே பிளேயர் நிறுவன பங்கின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.514ஐ எட்டியது. பிளேயர் பென்ஸ் நிறுவனத்தின் லாப வரம்பு மற்ற போட்டி நிறுவனங்களை காட்டிலும் சிறப்பாக உள்ளது. உதாரணமாக லிங்க் நிறுவனத்தின் லாப வரம்பு 7.7 சதவீதம் தான். ஆனால் பிளேயர் பென்ஸின் லாப வரம்பு 12.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 10 சதவீதம் குறைந்து ரூ.407.45ஆக சரிந்தது.


Click it and Unblock the Notifications