கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என்பார்கள். அது பங்குச் சந்தை விஷயத்தில் 100க்கு 100 சதவீதம் பொருத்தமாக இருக்கும். சில நிறுவன பங்குகள் குறுகிய காலத்திலேயே முதலீட்டாளர்களுக்கு அவர்களே நினைத்த பார்க்காத அளவுக்கு செல்வத்தை கொட்டி கொடுத்து விடும். அப்படிப்பட்ட மல்டிபேக்கர் பங்குதான் ஸ்ரீஜி டிரான்ஸ்லாஜிஸ்டிக்ஸ். இப்பங்கு கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 1,100 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
லாஜிஸ்டிக்ஸ் தீர்வுகள் வழங்கும் நிறுவனம் ஸ்ரீஜி டிரான்ஸ்லாஜிஸ்டிக்ஸ். இப்பங்கு மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுக்கு முன் இநிறுவன பங்குகளில் ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் இப்போது அது ரூ.1,19,873ஆக உயர்ந்திருக்கும்.

கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,098.73 சதவீதம் வருவாய் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்ரீஜி டிரான்ஸ்லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தனது பங்கின் முகமதிப்பை ரூ.10லிருந்து ரூ.2ஆக குறைத்து பங்குகளை பிரிப்பதாக அறிவித்தது.
பொதுவாக ஒரு நிறுவனம் பங்குகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்க அதன் நிலுவையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பங்கு பிரிப்பு ஆகும். ஸ்ரீஜி டிரான்ஸ்லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, பங்குகளை அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் அணுக்கூடியதாக (வாங்க கூடியதாக) மாற்றியது. மேலும், தனது தொடர்ச்சியான வளர்ச்சி பாதை மீதான நிறுவனத்தின் நம்பிக்கையையும் பிரதிபலித்தது.
ஸ்ரீஜி டிரான்ஸ்லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகளும் அந்நிறுவனம் வளர்ச்சி பாதையில் செல்கிறது என்பதை உறுதி செய்வது போல் அமைந்துள்ளது. 2023 செப்டம்பர் காலாண்டில் ஸ்ரீஜி டிரான்ஸ்லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் 53.36 சதவீதம் அதிகரித்து ரூ.65.17 கோடியாகவும், நிகர லாபம் 107.45 சதவீதம் அதிகரித்து ரூ.4.89 கோடியாகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2022 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.42.49 கோடி மற்றும் நிகர லாபம் ரூ.2.36 கோடி என்ற அளவிலேயே இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது ஸ்ரீஜி டிரான்ஸ்லாஜிஸ்டிக்ஸ் நிறுவன பங்கின் விலை ரூ.69ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.370 கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications