பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பலர் குறுகிய காலத்தில் குறைந்த முதலீடு செய்து பல லட்சங்களை சம்பாதித்ததாக சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இது நடக்குமா அல்லது சாத்தியமா என்றால் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். சில பங்குகள் எதிர்பாராத வகையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அளிக்கிறது.
உதாரணமாக ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் பங்குகள் நிலவரத்தை சொல்லலாம். இப்பங்கின் விலை கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 18,000 சதவீதத்துக்கு உயர்ந்துள்ளது. மேலும் இப்பங்கின் விலை தொடர் ஏற்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ரியல் எஸ்டேட் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் என்.எச்.-66-ன் ஒரு பிரிவை தரம் உயர்த்துவதற்காக ரூ.1,130 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இதன் எதிரொலியாக இந்நிறுவன பங்கின் விலை கடந்த சில வர்த்தக தினங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த 7 தினங்களில் இப்பங்கின் விலை 54.25 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது இப்பங்கு அதன் 5, 20,50,100 மற்றும் 200 நாட்கள் மூவிங் சராசரியை காட்டிலும் அதிக விலைக்கு வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின்படி, ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை கடந்த ஒராண்டில் 191 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. கடந்த 365 நாட்களில் இப்பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 163.37 சதவீதம் பெருக்கியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 8,634.57 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 18,197.41 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இப்பங்கில் முதலீடு செய்து இருந்தால் அது இப்போது ரூ.1.80 லட்சமாக உயர்ந்திருக்கும்.
மும்பை பங்குச் சந்தையில் இன்று ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை அப்பர் சர்க்யூட் அடித்தது. பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.99 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.222.85ஆக உயர்ந்தது.
இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகளும் சிறப்பாக உள்ளது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.112.25 கோடியும், நிகர லாபமாக ரூ.13.79 கோடியும் ஈட்டியுள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.775.81 கோடியும், நிகர லாபமாக ரூ.45.58 கோடியும் ஈட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications