தங்கம் நம் இந்தியர்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு உலோகம். நல்ல காரியங்கள் தொடங்கி ஒரு பணக் கஷ்டம் வரை நமக்கு துணையாக நிற்கின்றன தங்க நகைகள். இந்தியாவில் தங்க நகை விற்பனை எப்படி அமோகமாக நடக்கிறதோ தற்போது அதனை விட அமோகமாக மற்றொரு பிஸ்னஸ் நடக்கிறது.
தங்கம் விலை கடந்த ஆண்டு இறுதியில் வேகமாக உயர தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயையும் ஜனவரியில் 1.33 லட்சம் ரூபாயையும் கடந்தது. தங்கம் விலை உயர்ந்ததால் மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்தனர், அதே வேளையில் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவதை அதிகரித்தனர். தங்கம் விலை குறைந்த போதிலும் நகை கடன் பெறும் அளவு மட்டும் மாறவே இல்லை.
இந்தியாவில் தற்போது நகை கடன் வழங்கும் நிறுவனங்கள் தான் அதிக வளர்ச்சியை அடைந்து வருகின்றன. இந்த தொழிலில் முன்னணியில் இருக்கும் முத்தூட் ஃபைனான்ஸ் (Muthoot Finance) நிறுவனத்தின் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டு நிதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முத்தூட் ஃபைனான்ஸ், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் மற்றும் கடன் வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 43% அதிகரித்து, 2,825 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 1,974 கோடி ரூபாயாக தான் இருந்தது.
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடன் சொத்து மதிப்பு 43% அதிகரித்து, இதுவரை இல்லாத உச்சமாக 1,91,532 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் முதுகெலும்பாக விளங்கும் தங்க கடன் வர்த்தகம் 48% உயர்ந்து 1,75,527 கோடியாக அதிகரித்துள்ளது. மக்களிடையே தங்கத்தின் மீதான கடன் தேவை தொடர்ந்து அதிகமாக இருப்பதையே இது உறுதிப்படுத்துகிறது.
இந்நிறுவனத்தின் தலைவர் ஜார்ஜ் ஜேக்கப் முத்தூட் அளித்துள்ள பேட்டியில் தங்கள் நிறுவனத்தின் கிளைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செய்த முதலீடுகள், கடன் வழங்குவதை வேகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். இனி வரும் நாட்களிலும் தங்க நகை கடன் பிரிவில் நிறுவனம் வளர்ச்சி அடையுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்த காலாண்டில் மட்டும் நாடு முழுவதும் கூடுதலாக 86 புதிய கிளைகளை இந்நிறுவனம் திறந்துள்ளது.
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்கு மதிப்பு 3,128 ரூபாயாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இநிறுவன பங்கு 6% உயர்ந்துள்ளது.ஓராண்டில் 18% மற்றும் 5 ஆண்டுகளில் 102% வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 4,149 ரூபாய். கடன் வழங்கும் அளவீடுகளில் நிறுவனம் காட்டியுள்ள அபார வளர்ச்சி காரணமாக, பங்குச் சந்தையில் முத்தூட் ஃபைனான்ஸ் பங்குகள் பாசிடிவாகவே வர்த்தகாமும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 10% பங்குகளை இதில் வாங்கி வைத்துள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

