பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. பொதுவாக நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் அந்த நிறுவன பங்குகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் மற்றும் வர்த்தக நிலவரம் சிறப்பாக இருந்தால் பங்கின் விலை உயரும், அதேவேளையில் அவை எதிர்மறையாக இருந்தால் பங்கின் விலை சரிவை சந்திக்கும். கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததால் நேற்று நியூஜென் சாப்ட்வேர் நிறுவன பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டது.

தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த நிறுவனம் நியூஜென் சாப்ட்வேர். இந்நிறுவனம் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்கான லோ கோட் ஆட்டோமேஷன் பிளாட்பார்ம் வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. பங்குச் சந்தையில் நேற்று ஸ்மால்கேப் பங்கான நியூஜென் சாப்ட்வேர் நிறுவன பங்கு புதிய 52 வார உச்ச விலையை எட்டியது.
இந்நிறுவனத்தின் 2023 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பாக இருந்ததே இதற்கு காரணம். பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் மரண அடி வாங்கிய வேளையில், நியூஜென் சாப்ட்வேர் நிறுவன பங்கு விலை புதிய உச்சத்தை தொட்டது.
நியூஜென் சாப்ட்வேர் நிறுவனம் 2023 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.68 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 45 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.47 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 27 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.324 கோடியாக உயர்ந்துள்ளது. 2022 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.255 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.
மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் புதிதாக 11 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் நேற்று இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.900ஐ எட்டியது.
பின்னர் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததால் பங்கு விலை உச்சத்தில் இருந்து சரிந்தது. நேற்று வர்ததகத்தின் முடிவில் இப்பங்கு விலை ரூ.870ல் முடிவடைந்தது. கடந்த ஒராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 344 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
நியூஜென் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திவாகர் நிகம் கூறுகையில், இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (2023 ஏப்ரல்-டிசம்பர்) இந்தியா மற்றும் இஎம்இஏ-ல் சிறப்பான வர்த்தகம் காரணமாக வருவாயில் நிறுவனம் வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. கடன் மற்றும் வர்த்தக நிதி துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம்.
வலுவான லாபம் மற்றும் பணப்புழக்க உருவாக்கம் ஆகியவற்றை நாங்கள் பராமரித்தோம். இது எங்கள் செயல்பாடுகளின் நிதி வலிமை மற்றும் மீள்தன்மையை வெளிப்படுத்துகிறது. புதுமை, மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட அணுகுமுறையில் மேற்கொள்ளும் முதலீடுகள் மூலம், நாங்கள் எங்களின் தற்போதைய வாடிக்கையாளர் உறவுகளை வளர்த்து மற்றும் விரிவுப்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications