அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி உயர்வை தாண்டி சென்செக்ஸ் நிஃப்டி உயர்வு..!
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் புதன்கிழமை முடிந்த நிலையில், மாறுபட்ட கணிப்புகளையும் தாண்டி அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சியின் மீதான நம்பிக்கை மற்றும் வர்த்தகச் சந்தையைக் கருத்தில் கொண்டு 0.25 சதவீதம் அளவிலான வட்டியை உயர்த்தியுள்ளது.
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.75% ஆக இருந்தது. தற்போது 1% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்விற்கு பிப்ரவரி மாத வேலைவாய்ப்பு தரவுகள் கூடுதல் வாய்ப்புகளை அளித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 வருடத்தில் 3வது முறையாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டியை உயர்த்தியுள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெற்றாலும், வளரும் நாடுகள் இந்த முடிவை வரும்பவில்லை.

இந்த வட்டி உயர்வால் அமெரிக்காவில் வங்கி வைப்பு, பத்திர முதலீடுகள் மூலம் அதிக லாபத்தை அடைந்தாலும், கடன், கிரெடிட் கார்டு மீதான வட்டிகள் அதிகரிக்கும்.
இதுமட்டும் அல்லாமல் இன்னும் இரண்டு முறை உயர்த்த உள்ளதாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் இந்த முடிவிற்குப் பிற நாடுகள் வரவேற்பு அளிக்காத நிலையில், வழக்கத்திற்கு மாறாக இன்று சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்துள்ளது.
ஏற்கனவே உச்சத்தில் இருந்த நிஃப்டி குறியீடு, பெட்ரல் ரிசர்வ் வட்டி உயர்வு அறிவிப்பால் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீடு 2 வருட உச்சத்தை அடைந்துள்ளது.
10.15 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 164.51 புள்ளிகள் உயர்ந்து 29,566.56 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 55.60 புள்ளிகள் உயர்ந்து 9,140.40 புள்ளிகளை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications