அமெரிக்கப் பணவீக்கம் சற்று குறைந்து காணப்பட்டு உள்ளதால், பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான அமெரிக்க பணவீக்க தரவுகள் அமெரிக்கச் சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ள நிலையில், இதன் எதிரொலியாக ஆசிய சந்தையும் உயர்வுடன் துவங்கியுள்ளது.
இதனால் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக, திங்கள்கிழமை ஏப்ரல் 1 ஆம் தேதி இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் ஆசிய சந்தைகளின் போக்கை பின்பற்றி உயர்வில் திறந்தது மட்டும் அல்லாமல் வரலாற்று உச்சத்தை தொட்டு முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை ஜூன் மாதத்தில் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்கப் பணவீக்கம் கணிசமாகக் குறைந்து மூலம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இதுவே ஆசிய சந்தை இன்று காலை உயர்வதற்கான அடிப்படை காரணமாக அமைந்தது.
நிஃப்டி 50 குறியீடு 0.80% உயர்ந்து புதிய உச்சபட்சமாக 22,530 புள்ளிகளை தொட்டது. சென்செக்ஸ் குறியீடு 0.70% அதிகரித்து 500 புள்ளிகள் உயர்ந்தது 74254.62 புள்ளிகளை தொட்டு புதிய வரலாற்று உச்சத்தை புதிய நிதியாண்டின் முதல் நாளே தொட்டு உள்ளது.
இதற்கிடையில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.4.7 லட்சம் கோடி அதிகரித்து ரூ.391.67 லட்சம் கோடியாக உயர்ந்தது கூடுதல் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
மேலும் டாடா ஸ்டீல், JSW ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் திங்கள் கிழமை காலை வர்த்தகத்தில் 1-2% வரை உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டின் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இதோடு பஜாஜ் ஃபின்சர்வ், Larsen & Toubro, HCL டெக்னாலஜிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் லாபத்தில் திறந்தன. ஆனால் நெஸ்லே, ஏர்டெல், மாருதி, டைட்டன் ஆகியவை சரிவை நோக்கி பயணித்து வருகிறது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ரூ.1,173 கோடி மதிப்பிலான கேஸ் டர்பைன்கள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்குகள் காலை வர்த்தகத்தில் 3.4% உயர்ந்தன.
RVNL நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான சாலசர் டெக்னோ எஞ்சினியரிங், Rnergie Development Corporation நிறுவனத்திடமிருந்து $7.2 மில்லியன் மதிப்பிலான திட்டத்திற்கான குறைந்த ஏலதாரராக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, RVNL நிறுவனத்தின் பங்குகள் 5% வரை உயர்ந்து திறந்தன.
மேலும் நிஃப்டி பேங்க், நிதி சேவைகள், மீடியா, ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்யூமர் டூரபிள்ஸ் ஆகிய துறைகள் 1% க்கும் அதிகமாக உயர்வில் திறந்தன. நிஃப்டி எண்ணெய் & எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், ஹெல்த் கேர், ஃபார்மா மற்றும் ஆட்டோ துறைகள் சுமார் 0.9% வரை உயர்ந்தன. இதோடு நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 1.3 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 2 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications